Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேலை நீக்கப் படலத்தில் ஐ.டி. துறை!

வேலை நீக்கப் படலத்தில் ஐ.டி. துறை!
, திங்கள், 1 செப்டம்பர் 2008 (21:25 IST)
தகவல் தொழில் நுட்பத் துறை, பி.பி.ஓ, துறைகளில் வேலையிலிருந்து துரத்தப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் தங்களது செலவுகளைக் குறிப்பதில் கவனம் செலுத்தி வருவதால், அவர்களுக்கு சேவை வழங்கி வரும் பெரும்பாலான பெரிய, நடுத்தர ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டு அதனை செயல்படுத்தியும் வருகின்றனர்.

2006 - 07ஆம் ஆண்டுகளில் இது பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், இப்போது அது வெளிப்படையாகவே பேசப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஆண்டிலும் நடப்பு ஆண்டிலும் இந்த நடவடிக்கைகளால் வேலையிழந்தோர் எண்ணிக்கை விவரம் துல்லியமாக கணக்கிடப்பட முடியவில்லை என்று இந்தத் துறையைச் சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.

டி.சி.எஸ்., விப்ரோ, சத்யம், இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல்., காக்னிசன்ட் ஆகிய நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிறுவனங்களில் பணியாற்றும் முழு நேர ஊழியர்கள் போக மீதமுள்ள ஊழியர்களில் ஒன்று அல்லது 2 விழுக்காட்டு ஊழியர்களை வெளியே அனுப்பப்பட்டிருந்தாலும் கடந்த ஆண்டில் மட்டும் 4,000 முதல் 5,000 ஊழியர்கள் வேலையிழந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

இன்னும் பல நிறுவனங்கள் 40 விழுக்காடு ஊழியர்களை முழு நேர ஊழியர்களாக வைத்துக் கொண்டு மீதமுள்ளோரை பணித்திறன் பயிற்சிக்கு அனுப்பி 3 மாத காலம் கண்காணிக்கின்றனர், பிறகு ஊழியரின் மேம்பாடு பொறுத்து வைத்துக் கொள்வதா அல்லது வீட்டிற்கு அனுப்புவதா என்று தீர்மானிக்கப்பதாக, இந்த துறையைச் சேர்ந்தவர்கள் கூறிவருகின்றனர்.

ஆனால் இங்கு முக்கியமான கேள்வி என்னவெனில் பணித்திறனை எவ்வாறு மதிப்பீடு செய்கின்றனர் என்பதே? அதற்கான அளவை என்ன என்பதே.

பணித்திறனை ஆய்வு (Performance Apprisal) செய்ய பயன்படுத்தப்படும் அளவுகோல்களில் எவ்வளவு விஞ்ஞானபூர்வமாக நடைபெறுகிறது, எவ்வளவு மதிப்பீடு அந்த ஆய்வைச் செய்யும் தனி நபர் விறுப்பு வெறுப்புகளைச் சார்ந்தது என்பதெல்லாம் நம் முன் உள்ள கேள்விகள்.

உதாரணமாக, ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு புரொகிராமர் ஒருவரின் பணித்திறனை எப்படி மதிப்பீடு செய்வார்கள் என்று பார்ப்போம், முக்கியமாக வாடிக்கையாளர் இறுதிக் கெடுவை அவர் சந்திக்கிறாரா, பணி எண்ணிக்கை, குறைபாடுகளின் தன்மை மற்றும் அந்த குறிப்பிட்ட புரொகிராமின் ஒட்டுமொத்த தரம் ஆகியவற்றுடன் பிற சோதனைகளும் இருக்கின்றன. அதாவது "முக்கிய தீர்மானப்பகுதி" (Key Result Area) என்ற ஒன்றை அளவுகோலாக வைத்துக் கொள்கின்றனர். இது முழுக்க முழுக்க அளவு சார்ந்ததே என்பதை

முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவன மனித வளத் துறைத் தலைவரே ஒப்புக் கொள்கிறார்.

அதாவது புரொகிராமர் என்றால் அவரது புரொகிராம் உற்பத்தித்திறன் (அந்த புரொகிராமில் எவ்வளவு மறுபயன்பாடு உடையது) குறைபாடு அற்ற புரொகிராம் தயாரிப்பு, தர மதிப்பீடுகளுக்கு இணங்கும் தன்மை ஆகியவை உட்பட பல பணித்திறன் மதிப்பீட்டு அளவைகள் உள்ளதாகக் கூறுகின்றனர்.

ஆனால் இவையெல்லாம் எப்படி கணக்கிடப்படுகின்றன என்ற வழிமுறை மட்டும் கூறப்படமாட்டாது, ஒரு வாடிக்கையாளர் திருப்தி அடையவில்லை என்று மட்டும் கூறப்படும். அவர் ஏன் திருப்தி அடையவில்லை என்று கூறப்பட மாட்டாது. புரொகிராமில் குறைபாடு இருந்தால் அதை சரி செய்த நபர் யார், அந்த குறைபாடு என்ன ஆகியவை பற்றியும் கூறப்படமாட்டாது.

களையெடுப்பு நடைமுறை என்பது பல வேளைகளில் நிறுவனத்தின் செலவுக் கொள்கை, பணி நியமனக் கொள்கை, மற்றும் சில நடைமுறை விதிகளின் படியே நடைபெறுகிறது. அவற்றை நிறைவேற்ற இது போன்ற அளவுகோள்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது என்ற சந்தேகம் பலருக்கு எழும்புவது நியாயமே.

ஏனெனில் ஒரு காலத்தில் பணியாளர்கள் தேர்வு மிக அதிகம் இருந்ததற்கான அளவுகோல்களும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உருவாக்க விதிமுறைகள்(Constitutive Regulations and Policies) சார்ந்ததாகவே இருந்து வந்துள்ளன. இப்போது பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பும்போதும் இந்த உருவாக்க விதிமுறைகளே காரணமாக உள்ளன. இந்த உருவாக்க விதிமுறைகள் அவ்வப்போதைய அரசின் நிதிக் கொள்கை, சலுகை அறிவிப்பு, உலகப் பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் வாடிக்கையாளர் தரப்பு மாற்றங்கள், அவர்களது பட்ஜெட் ஆகியவை பொறுத்து அடிக்கடி மாறுபவையே.

எனவே புறவயமான காரணங்களே பெரும்பாலும் பணியாளரை வேலையை விட்டு அனுப்புவதில் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

அனைவரும் திறமையானவர்கள் இல்லைதான், அதற்காக பணியிலிருந்தே அனுப்பும் அளவிற்கு அந்த மட்டத்தில் யாரும் சோடைபோனவர்களாக இருப்பார்கள் என்பது நம்புவதற்கு சற்று கடினம்தான்.

இன்றைய தினம் ஐ.டி.துறை நிர்வாக மந்திரமாக உச்சரிக்கப்படுவது 'செலவைக் குறை' என்பதுதான், செலவு குறைக்கவேண்டும் என்றவுடன் இவர்கள் நினைவிற்கு வருவது அங்கு பணிபுரியும் தொழில் முறை ஊழியர்களில் கடை நிலையில் உள்ளவர்கள்தான் என்பதும் ஒரு கசப்பான உண்மையே.

எனெனில் கொள்கை வகுப்பவர்கள் நிறுவனத்தின் நிர்வாக உயர்மட்டக் குழுவினர்களே, இவர்கள் தங்களின் அனாவசிய செலவுகளை குறைக்குமாறு ஒரு போதும் கொள்கைகளை வகுப்பதில்லை என்பதும் மற்றொரு கசப்பான உண்மையே.

Share this Story:

Follow Webdunia tamil