வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்களின் 3G iPhone-கள் அறிமுகம்!
, வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (14:01 IST)
இந்திய இளைஞர்கள் பெரிதும் எதிர்பார்த்த மூன்றாம் தலைமுறை (3G) இணைய செல்பேசிகளை (iphones) ஜி.எஸ்.எம் சேவையில் முன்னணியில் உள்ள பார்தி ஏர்டெல், வோடாஃபோன் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன.சென்னையில் iphone-களை அறிமுகம் செய்த ஏர்டெல் நிறுவனத்தின் தமிழகப் பிரிவு முதன்மைச் செயல் அதிகாரி ராஜிவ் ராஜகோபால், நமது நாடு முழுவதும் 2 லட்சம் பேர் 3G iPhone-கள் வேண்டிப் பதிவு செய்துள்ளதாகவும், இதிலு 60 விழுக்காட்டினர் சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் என்றும் தெரிவித்தார்.
8
GB நினைவகம் கொண்ட செல்பேசிகள் ரூ.30,000, 16 GB நினைவகம் கொண்ட செல்பேசிகள் ரூ.36,100 என இரண்டு வகை 3G iPhone-கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில், மல்டிமீடியா வசதி, அகன்ற துல்லியமான தொடுதிரை ஆகிய வசதிகள் உள்ளன. கணினியைப் போலவே பயன்படுத்தத்தக்க வகையில் வேகமான இணையத் தொடர்பு வசதி, GPS வசதி உள்ளிட்டவையும் இந்தச் செல்பேசிகளில் உள்ளன. சென்னையில் நடந்த விழாவில், 3G iPhone-களை பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நடிகர் பிரசன்னா ஆகியோர் வெளியிட ஆற்காடு நவாப் இளவரசர் முகமது ஆஷிஃப் அலி பெற்றுக்கொண்டார். தமிழகத்திலும் புதுச்சேரியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 84 கடைகளில 3G iPhone- கள் கிடைக்கும்.
நாடு முழுவதும் 65 நகரங்களில்!மேலும், டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய முக்கிய நகரங்கள் உள்பட நாடு முழுவதும் 65 நகரங்களில் 3G iPhone-கள் கிடைக்கும் என்று ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் கபூர் தெரிவித்தார். ஆப்பிள் நிறுவனத்தின் 3G iPhone- கள் அந்த நிறுவனத்தின் 19 கிளைகளில் இன்று முதல் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதிகமான விலை பற்றிக் கேட்டதற்கு, "மேற்கத்திய நாடுகளில் செல்பேசி தயாரிப்பாளர்களுக்கும், அலைவரிசை வழங்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு குறைவான விலையில் 3G iPhone-கள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் அதுபோன் நடைமுறைகள் கிடையாது." என்றார். அதாவது, மேற்கத்திய நாடுகளில் பயன்பாட்டில் உள்ள 3G iPhone-களில், அவற்றை விற்கும் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ள அலைவரிசைகளை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், இந்தியாவில் கிடைக்கும் 3G iPhone-களில் எந்த அலைவரிசையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தற்போது ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ள 3G iPhone-கள் வேறு அலைவரிசைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் Lock- உடன் வருகின்றன. இதனால் வாடிக்கையாளர் இடையில் தனது எண்ணை மாற்ற முடியாது. இந்த Lock-ஐ உடைக்கும் மென்பொருட்கள் இணைய தளத்தில் தாராளமாகக் கிடைப்பதைச் சுட்டிக்காட்டிதற்கு, "அந்த மென்பொருட்கள் பற்றி நாங்கள் அறிந்துள்ளோம். வாடிக்கையாளர்கள் அத்தகைய மென்பொருட்களை நாடாத வகையில் எங்களின் சேவை இருக்கும்" என்றார் சஞ்சய் கபூர்.