நமது நாட்டின் ஏதோ ஒரு மூலையில் சிறு தொகையைக் கடனாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஏழை, எளிய மக்களுக்கும், அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் காத்திருக்கும் அன்பர்களுக்கும் இடையில் பாலமாகச் செயல்பட ஒரு இணைய தளம் துவக்கப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு, நாக்பூரில் பெட்டிக்கடை வைத்துள்ள புஷ்பாவிற்கு ரூ.5,000 கடனாகத் தேவைப்படுகிறது. அவர் தனது வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை, பொதுத் தொலைபேசி ஒன்றின் மூலமும், டெய்லரிங் பணி மூலமும் சம்பாதிக்கிறார். பெட்டிக்கடைக்கு இன்னும் சில பொருட்களை வாங்கி அதை மேம்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்.
அடுத்து, அமெரிக்காவில் டெக்சாசில் வசிக்கும் சந்தோஷ், வருடத்திற்கு 3.5% வட்டி கிடைக்கும் என்ற உத்தரவாதத்துடன், ரூ.1000த்தை ஏழைகளுக்கு ஒரு வருடத்திற்குக் கடனாகக் கொடுப்பதற்கு விரும்புகிறார்.
இதுபோன்ற புஷ்பாக்களுக்கும் சந்தோஷ்களுக்கும் இடையில் பாலமாகச் செயல்படும் இணைய தளம்தான் ரங்தே(Rangde). இந்த இணைய தளம் புஷ்பா போன்றவர்களின் பொருளாதார சுதந்திரத்தையும், சந்தோஷ் போன்றவர்களின் சமூகப் பொறுப்பையும் நிறைவு செய்கிறது.
இந்தியாவின் முதல் ஆன்லைன் சிறுகடன் இணைய தளமான ரங்தே-வை உருவாக்கியவர்கள் ராம் என்.கே மற்றும் ஸ்மிதா ராம். சமூக அக்கறை கொண்ட கடன் தருபவர்களையும், கடன் தேவைப்படும் ஏழை மக்களையும் இணைப்பதற்கு இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் நோக்கத்துடன் இந்த இணைய தளம் துவங்கப்பட்டுள்ளது.
இலாப நோக்கமில்லாமல் துவக்கப்பட்டுள்ள இந்த இணைய தளத்தின் நோக்கம், இந்திய கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான ஏழை மக்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்வதுதான் என்று இதை உருவாக்கியவர்கள் தெரிவிக்கின்றனர்.
ரங்தே இணைய தளத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து டிசம்பர் 2006 இல் உருவாகி விட்டது. இந்தக் கருத்து 2008 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் செயலுக்கு வந்துள்ளது.
ரங்கே இணைய தளத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான ராம், மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். சத்யம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். ஸ்மிதா, "Learning Communities in Oxfordshire" என்ற ஒரு அரசுத் திட்டத்தில் பணியாற்றி வருகிறார்.
பல்வேறு சமூக சேவைப் பணிகளில் அக்கறை கொண்டுள்ள ராம், "குழந்தைத் தொழிலாளர், விவசாயிகள் பிரச்சனை, ஊனமுற்ற குழந்தைகள் பிரச்சனை எனப் பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்திய பிறகு இறுதியாக சிறுகடன் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்தோம்" என்கிறார்.
சமூகப் பணிகளில் ஸ்மிதாவிற்கு உள்ள அனுபவமும், ராமிற்கு உள்ள மென்பொருள் அனுபவமும், ரங்தே திட்டத்திற்கு உயிர் கொடுத்துள்ளன.
"செப்டம்பர் 2001 முதல் எனது வேலையை விட்டுவிட்டு, ரங்தேவிற்காக முழுமையாகப் பணியாற்றி வருகிறேன்" என்கிறார் ஸ்மிதா. இந்தியாவில் பல நாட்கள் தங்கியிருந்து, இங்கு அறிமுகமானவர்களுடன் தொடர்ந்து பேசி ரங்தே இணைய தளத்திற்கு உருவாக்கியுள்ளதாக அவர் கூறினார்.
ரங்தே இணைய தளத்தின் கிரியேட்டிவ் பார்ட்னராக செயல்பட நியதி டெக்னாலஜிஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. லாப நோக்கமில்லாத பணி என்பதால் கட்டணத்தில் 50 விழுக்காட்டை குறைத்துள்ளது நியதி நிறுவனம். தற்போது, அடுத்த ஒரு வருடத்திற்கு ரங்தே இணைய தளத்திற்கு உதவுவதாக ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனம் உறுதியளித்துள்ளது.
தற்போது, மராட்டியம் மற்றும் தமிழகத்தில் 56 பேர் கடன் பெறுவதற்கு ரங்தே இணைய தளம் உதவியுள்ளது. சுமார் 38 பேர் இதன் மூலம் கடன் தந்துள்ளனர்.