இந்தியாவில் மின்னஞ்சல் அல்லது இணையதளங்களில் உலவ வேண்டுமெனில் பிரவுசிங் சென்டர்கள் என்று அழைக்கப்படும் இணையதள மையங்கள்தான் முக்கியமான இடமாக இருந்து வந்தது. ஆனால் இந்த மையங்களின் எண்ணிக்கை 2008-ம் ஆண்டில் கடுமையாக குறைந்துள்ளது.
சி.ஐ.ஐ.-ஐ.எம்.ஆர்.பி. பிராண்ட் பேன்ட் வெளியிட்டுள்ள தகவலின் படி 2004, 2005ஆம் ஆண்டுகளில் சுமார் 60 விழுக்காடு வளர்ச்சி விகிதம் கண்ட இந்தத் துறை 2008-ல் 20 விழுகாடாக குறைந்துள்ளது.
நாட்டில் சுமார் 1,80,000 சைபர் கஃபேக்கள் உள்ளது. பெரிய அளவில் இந்த மையங்களை நடத்துபவர்கள் இந்த சரிவிற்கு காரணமாக, அரசு சலுகைகள் இன்மை, கணினி பாதுகாப்பு இடர்பாடுகள், சைபர் கஃபே உரிமையாளர்களுக்கு பல்வேறு விதங்களில் கொடுக்கப்படும் இடையூறுகள் ஆகியவையே என்று கூறுகின்றனர்.
பூனா உள்ளிட்ட சில நகரங்களில் "சைபர் கஃபே" துவங்க வேண்டுமென்றால், நகராட்சி சுகாதாரத் துறையிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. ஏனெனில் "கஃபே" என்ற பின்னொட்டு உள்ளதால் இந்த விசித்திர நடைமுறை இருந்து வருகிறது. கஃபே என்றால் சிற்றுண்டிச் சாலை என்றுதானே பொருள். இதனால் சைபர் கஃபேயிற்கும் ஒருவர் சுகாதாரத் துறை அனுமதி பெறவேண்டுமாம்.
மேலும் காவல்துறையிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் ஒன்றையும் பெற வேண்டியது அவசியமாகிறது. சைபர் கஃபே உரிமையாளர்களுக்கு உள்ளூர் காவல்துறையினர் தரும் கடும் தொல்லைகளும் இந்த மையங்கள் குறைந்து வருவதற்கு ஒரு முக்கிய காரணம் என்று இந்தத் துறையைச் சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர்.
2002-ஆம் ஆண்டு 85 விழுக்காடு வளர்ச்சி கண்ட சைபர் கஃபேக்கள் இன்று கடுமையாக குறைந்து 20 விழுக்காடாகியுள்ளது என்று சி.ஐ.ஐ.-ஐ.எம்.ஆர்.பி. ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்திய இணையதள சேவை வழங்குவோர் கூட்டமைப்பின் தலைவர் ராஜேஷ் சாரியா இது பற்றி பத்திரிக்கை ஒன்றில் கூறுகையில், வாடிக்கையாளர்கள் அடையாள நிரூபணம் உட்பட அவர்கள் பிரவுஸ் செய்த இணையதள முகவரிகள் அனைத்தையும் ஒருவர் தக்க விதத்தில் பராமரித்து வர நேரிடுகிறது, பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் தேவையில்லை ஆனால் சைபர் கஃபேக்களுக்கான தனித்த மையச் சட்டம் ஒன்றை அமல் செய்ய வேண்டும், உள்ளூர் காவல்துறை தலையீட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் பொதுத் தொலைபேசி மையங்களுக்கும் சைபர் கஃபேக்களுக்குமான விதிமுறைகளில் அரசு பாரபட்சம் காட்டுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
எப்படியிருப்பினும், 2002 ஆம் ஆண்டு சைபர் கஃபேக்கள் பெருகிய அளவிற்கு இனிமேல் வாய்ப்பில்லை என்றுதான் இந்தத் துறையை சார்ந்தவர்கள் கருதுகின்றனர்.