நடுத்தர வேலைவாய்ப்பில் உள்ள தொழில் வல்லுனர்களின் பிரச்சனைகளுக்கு உதவும் வகையில் 'மிட்கேரியர்ஸ்.காம்' என்ற இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இவ்விணையதளத்தின் தலைமை பொறுப்பாளர் ஜி. ராமு, இதனை முறைப்படி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணி புரிந்து வரும் நடுத்தர தொழில் வல்லுனர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்குவதே தனது இணையதளத்தின் நோக்கம் என்றார்.
இதன்படி 30 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய, 8 ஆண்டுகள் அனுபவம் கொண்ட பணியாளர்கள் நடுத்தர தொழில் வல்லுனர்களாக இனம் காணப்பட்டிருப்பதாகவும், இத்தகைய பிரிவினரில் 93 விழுக்காட்டினர் ஏதேனும் ஒரு வகையில் தங்கள் பணியில் மாற்றம் காண விரும்புவதாகவும் அவர் கூறினார்.
பணிபுரியும் இடங்களில் சந்திக்கும் பிரச்சனைகள், தங்கள் திறமைகளை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்கான ஆலோசனைகள், தங்களுக்கான சரியான பணியை தேர்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆலோசனைகள் இதன் மூலம் அளிக்கப்பட இருப்பதாக ராமு தெரிவித்தார்.
இதற்கென, இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற குழுவினர் ஆலோசனை வழங்கவிருப்பதாகவும், இதன்படி சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களைச் சேர்ந்த தொழில் நிபுணர்களுடன் தமது இணையதளம் வர்த்தக் கூட்டு வைத்திருப்பதாக அவர் கூறினார்.
நடுத்தர தொழில் வல்லுனர்களிடம் தமது நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளை விவரித்த அவர், பணிபுரிவோருக்கு மட்டுமின்றி, வேலைவாய்ப்பை தேடும் இளைஞர்களுக்கும் மிட்கேரியர்ஸ்.காம் இணையதளம் பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறது என்றார்.