சர்வதேச தரச்சான்று கழகத்தின் கூட்டு தொழில்நுட்ப குழு, சர்வதேச மின் தொழில்நுட்பக் குழு ஆகியவற்றின் 14 மாத தீவிர ஆய்வுக்குப் பிறகு, மைக்ரோசாப்டின் ஆபிஸ் ஓபன் எக்ஸ்.எம்.எல். (Office Open XML) ஆவண வடிவத்திற்கு சர்வதேச தரச்சான்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இச்சான்று பெற சர்வதேச தரச்சான்று தேசிய குழுவிடம் மூன்றுல் ஒரு பங்கு ஆதரவு பெற வேண்டும். அதேசமயம், நான்கில் ஒரு பங்கு எதிரான ஆதரவும் பெறக்கூடாது. அதன்படி, இந்த சான்றுக்கு 66 விழுக்காடு ஆதரவு பெற வேண்டிய நிலையில், மைக்ரோசாப்ட்டின் ஓபன் எக்ஸ்.எம்.எல் 75 விழுக்காடு ஆதரவை பெற்றுள்ளது.
வாக்களித்த 87 நாடுகளில் 61 நாடுகள் இதற்கு ஆதரவாகவும், 10 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன. 16 நாடுகள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதுதவிர, 'பி உறுப்பினர்கள்' என்று அழைக்கப்படும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கூட்டு தொழில்நுட்ப தேசிய குழுவில் 24 வாக்குகளை ஆதரவாக பெற்றுள்ளது.
இதனையடுத்து, "எச்.டி.எம்.எல்., பி.டி.எஃப்., ஓ.டி.எஃப். ஆகிய ஐ.எஸ்.ஓ./ஐ.இ.சி. அங்கீகாரம் பெற்ற ஓபன் டாக்மன்ட்களுடன் தற்போது ஓபன் எக்ஸ்.எம்.எல். கைகோர்த்துள்ளது" என்று மைக்ரோசாப்ட மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
ஆப்பிள், கோரல், சன் மைக்ரோசிஸ்டம்ஸ், நோவல் போன்ற நிறுவனங்கள் பயன்பெறும். உலகளவில் தகவல் தொழில்நுட்ப பயனாளிகள் தங்களின் மென்பொருள் மேம்பாட்டிற்கு ஓபன் எக்ஸ்.எம்..எல்.-யை பயன்படுத்துவர் என்று அந்நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தேசிய குழுக்களின் 86 விழுக்காடு ஆதரவு ஓபன் எக்.எம்.எல். வளர்ச்சிக்கு துணை நிற்கிறது. வாடிக்கையாளர்கள், தொழில்நுட்ப விநியோகஸ்தர்கள், உலகின் பல்வேறு நாட்டு அரசாங்கங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இந்த வடிவூட்டத்திற்கு கிடைத்துள்ள வெற்றி புதிய புரட்சிக்கு வழிவகுக்கும்" என்று மைக்ரோசாப்ட் நிறுவன பொது மேலாளர் டாம் ராபர்ட்சன் தெரிவித்தார்.
உலகம் முழுவதிலும் உள்ள லினக்ஸ், விண்டோஸ், மேக் ஓ.எஸ். (ஆப்ரேட்டிங் சிஸ்டம்), பாம் ஓ.எஸ்., நூற்றுக்கணக்கான தனிப்பட்ட மென்பொருள் விற்பனையாளர்கள், பிளாட்பார்ம் விநியோகிஸ்தர்கள் ஆகியோர்களின் பல்வேறு விதமான பயன்பாட்டிற்கு ஆபிஸ் ஓபன் எக்ஸ். எம்.எல், உதவும்.
மைக்ரோசாப்ட் (இந்தியா) தேசிய தொழில்நுட்ப அதிகாரி விஜய் கபுர் கூறுகையில், "பன்முக தரமிக்க தயாரிப்பை இந்த தகவல் தொழில்நுட்ப உலகிற்கு அளிக்க சர்வதேச தரச்சான்று தேவை. தொழில்நுட்ப வல்லுநர்கள், வாடிக்கையாளர்கள், சர்வதேச அரசுகள் ஆகியவற்றின் உள்ளீடுகள் இந்த ஓபன் எக்ஸ்.எம்.எல். மேம்பாட்டிற்கு காரணம். இது வாடிக்கையாளர்களுக்கு மேலும் பயனுள்ளதாக்கப்படும். மைக்ரோசாப்ட் தனது ஓபன் எக்ஸ்.எம்.எல். தயாரிப்புகளுக்கு உரிய ஆதரவளிக்கும். பி.ஐ.எஸ்., அரசாங்க, நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து இத்துறையில் மேலும் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் அளிக்கும்" என்று தெரிவித்தார்.