மாடலிங் என்றழைக்கப்படும் ஆடை வடிவமைப்புத் துறையில் நுழைந்து எப்படியாவது பெயரையும், புகழையும், பணத்தையும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தற்போது அதிக ஊதியம் வாங்கும் மென் பொருள் வல்லுநர்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது.
ஆடை வடிவமைப்பு (fashion), விளம்பரத் துறை மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்று வருகிறது. இத்துறையில் கால்பதிக்க ஏராளமான இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை தங்கள் வாழ்க்கை தொழிலாக ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவுக்கு இளைஞர்களை இத்துறை அண்மைக் காலமாக அதிக அளவில் வசீகரித்து வருகிறது.
காரணம்: பேரும் புகழும் பணமும்தான்.
அண்மைக் காலமாக இந்திய தகவல் தொழில் நுட்பத் துறையின் வளர்ச்சியால், இதுவரை இந்தியாவில் படித்து முடித்தவுடன் வாங்க முடியாத ஊதியத்தை கணினிதுறையில் வாங்குகின்றனர். மற்ற எல்லாத் துறையினரையும் விட கை நிறைய ஊதியம் வாங்கினாலும், வசதியான வாழ்க்கை நிலையில் வாழ்ந்தாலும், இவர்கள் தங்களின் வாழ்க்கையில் வெறுமையை உணருவதைத்தான் இத்துறை ஊழியர்களின் மாயக் கவர்ச்சி துறையின் மீதான ஈடுபாடு எதிரொலிக்கின்றதோ என்ற கேள்வி எழாமல் இல்லை.
தற்போது அதிகம் ஊதியம் வாங்கும் மென் பொருள் வல்லுநர்கள் பூனைநடை நடக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அண்மையில் ஹேய்வார்ட்ஸ் நிறுவனம் மிஸ்டர் இந்தியா உலகப் போட்டி 2008-யின் அடிப்படைச் சுற்றுக்கு நாடு முழுவதும் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளது.
தென் மாநிலங்களுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்பதற்காக வந்த விண்ணப்பங்களில் 70 விழுக்காடு விண்ணப்பங்கள் மென்பொருள் வல்லுநர்களிடம் இருந்து வந்துள்ளதாக டைம்ஸ் இன்னோவேடிஃவ் மீடியா நிறுவனத்தின துணை நிகழ்ச்சி அமைப்பாளர் கவிதா பாஹா தெரிவித்துள்ளார்.
இது தவிர அழைப்பு மையங்களில் பணியாற்றுபவர்கள், பல்வேறு தொழில் நுட்ப படிப்புகளை படித்து வரும் மாணவமாணவிகளிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். விளம்பரத் துறையில் மாடலாக வருவதற்கு நுழைவு வாயிலாக இந்தப் போட்டிகளில் பங்கேற்பதை இளைஞர்கள் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில் நுட்பத் துறையின் விரைவான வளர்ச்சியால் நாட்டில் தற்போது உள்ள நிலையில், தகவல் தொழில் நுட்பத் துறை ஒன்று மட்டும் தான் வருமானத்தை அதிக அளவில் ஈட்ட உத்தரவாதமான துறையாக விளங்கி வருகிறது. இந்நிலையில் மென்பொருள் துறை சார்ந்த வல்லுநர்கள் பூனை நடை நடக்க முனைவது சமுகத்தில் பெயரையும், புகழையும் பெற்றவிடலாம் என்ற ஆசையால்தான் என்றும் கவிதா பாஹா கூறியுள்ளார்.