இந்திய - ஆசிய மண்டலத்தில் அயல் அலுவல் பணித்துறையின் வளர்ச்சி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அனைத்து நிலைகளிலும் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
இந்திய - ஆசிய மண்டலத்தில் அயல் அலுவலக பணித்துறையின் இந்த விரைவான வளர்ச்சிக்கு காரணம் இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட தொழில் நுட்பங்கள், சேவைத் தொழில் நுட்பத்தை வாங்கும் நிறுவனங்கள்தான் காரணம் என்று டி.பி.ஐ தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த மண்டலத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கும், இந்தியாவுக்கும் உள்ள தொடர்பு மிக முக்கியமானது. ஒவ்வொரு ஆண்டும் அயல் அலுவலக பணிக்கான ஒப்பந்தத் தொகை இரண்டு மடங்காக உயர்ந்து வருகிறது.
சேவைத் தொழில் நுட்பச் சந்தையினர் மிகப் பெரிய அளவில் இந்த மண்டலத்தில் தான் தங்களின் கவனத்தைச் செலுத்தி வருகின்றனர் என்று அண்மையில் டி.பி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டில் அயல் அலுவலக பணித்துறை கணிசமாக வளர்ச்சியடைந்துள்ளது.
இதற்கு காரணம் இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களின் தேவை அதிகரிப்புத்தான் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த மண்டலத்தில் இரண்டாவது ஆண்டாக உள்ள வலுவான வளர்ச்சி, பல்வேறு துறைகளில் பற்றாக்குறையை உருவாக்க உள்ளது.
கடந்த ஆண்டில் வெறும் 4 விழுக்காடு அயல் அலுவலக பணிகளுக்கான ஒப்பந்தங்கள் ஏற்பட்ட நிலையிலும், ஒப்பந்தத்தின் மதிப்பு முந்தைய ஆண்டைக்காட்டிலும் 30 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதாவது 9.9 பில்லியன் டாலரில் இருந்து 12.8 பில்லியன் டாலராக அதிகரித்தது.
இதேப்போன்று ஆண்டு வருவாயும் 13 விழுக்காடு உயர்ந்துள்ளது. இது உலக சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளது. ஆசிய - பசிபிக் மண்டலம் மட்டும்தான் இந்த நிலையிலும் வளர்ச்சியை பெற்றுள்ளது.
சராசரி அயல் அலுவலக பணி ஒப்பந்த மதிப்பு ஆசிய - பசிபிக் மண்டலத்தில் 25 விழுக்காடு அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது 141 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 176 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. கடந்த ஆண்டு 9 பெரிய திட்டங்களின் மதிப்பு மட்டும் 1.5 பில்லியன் டாலராக இருந்தது.
இது உலக அளவிலான மிகப் பெரிய ஒப்பந்தங்களில் மூன்றில் ஒரு பங்காகவும், உலகம் முழுவதும் நடைபெற்ற மொத்த ஒப்பந்தங்களில் ஆறில் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய ஒப்பந்தங்கள் மேற்கொள்வது ஆசியாவை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களில் மிகவும் பிரபலமான ஒரு நடைமுறையாக உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டில் இந்த மண்டலத்தில் அயல் அலுவலக பணித்துறையின் செயல்பாடு மிகவும் வலுவானதாக அமைந்திருந்தது. அயல் அலுவலக பணித் துறையின் மொத்த ஒப்பந்த மதிப்பு ஆசிய - பசிபிக் மண்டலத்தில் கடந்த ஆண்டு 101 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அதேப்போன்று ஒப்பந்த மதிப்பைப் பொறுத்தமட்டில் கடந்த ஆண்டு இத்துறைக்கு சிறப்பான ஆண்டாகவும் அமைந்தது. சராசரியாக அயல் அலுவலக பணி ஒப்பந்த மதிப்பு 81 விழுக்காடு அளவுக்கு உயர்ந்ததாகவும் தெரிவித்துள்ளது.
ஆசிய - பசிபிக் மண்டலத்தில் அயல் அலுவலக கணித் துறை வளர்ச்சிக்கு காரணம் இந்தியா மற்றும் சீன நிறுவனங்கள் தான். இந்தியா தொலைத் தொடர்பு, நிதிச் சேவைப் பணிகளிலும், சீனா தொலைத் தொடர்புத் துறையில் மட்டும் மிகப் பெரிய ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது என்று டி.பி.ஐ.யின் ஆசிய - பசிபிக் நிர்வாக இயக்குநர் ஆமோ பிரான்ஸ் தெரிவித்துள்ளார்.
அயல் அலுவலக பணித்துறையின் சேவைகளைப் வாங்குவதில் பொதுவாக ஆஸ்ட்ரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் பட்டியலில் இருக்கும். ஆனால் கடந்த ஆண்டு இந்தியா தனது பங்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இந்திய பொருளாதாரம் வலுவடையத் தொடங்கியுள்ள நிலையில் இந்திய நிறுவனங்கள் தங்களின் திறனை அதிகரிக்கவும், சந்தையில் கணிசமான இடத்தைப் பிடிக்கவும் அயல் அலுவலக பணிச்சேவையை பயன்படுத்த தொடங்கியுள்ளன.
இந்திய நிறுவனங்களுக்கு இடையேயான இந்த போட்டி நிலையும், அடுத்த சில ஆண்டுகளில் பல பொதுத் துறை நிறுவனங்கள் தனியார் வசம் வரும் சூழ்நிலையில் இந்த வளர்ச்சி 2008 ஆம் ஆண்டைக் கடந்தும் தொடரும் என்று கூறியுள்ளார்.
அயல் அலுவலக பணிக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இந்த சேவையை வழங்கும் இந்தியா ஹெரிட்டேஜ் சேவை நிறுவனங்களின் உலகளாவிய ஒப்பந்தங்கள் பெறுவதில் கடந்த 2006 ஆம் ஆண்டு இருந்த 6 விழுக்காடு நிலையில் இருந்து கடந்த ஆண்டு 9 விழுக்காடாக அதிகரித்துள்ளது. வேறு எந்த சேவை வழங்கும் துறையும் இந்த அளவுக்கு சந்தையில் தனது பங்கை அதிகரித்து இருக்க முடியாது. மண்டல அளவிலான இந்நிறுவனங்களின் பங்கும் 11 லிருந்து 16 விழுக்காடாக உள்ளதாகவும் டி.பி.ஐ. தெரிவித்துள்ளது.