கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள களமச்சேரியில் 4,000 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக உள்ள ஒருங்கிணைந்த குடியிருப்பு மேம்பாடு மற்றும உள் கட்டமைப்பு நிறுவனத்தின் (ஹெச்.டி.ஐ.எல்.) தகவல் தொழில் நுட்ப நகரை வரும் 19 ஆம் தேதி அம்மாநில முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைக்கிறார்.
களமச்சேரியில் 70 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த ஒருங்கிணைந்த தகவல் தொழில் நுட்ப நகரில், தகவல் தொழில் நுட்பம், அது சார்ந்த நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள், பள்ளிகள், வணிக வளாகங்கள், நட்சத்திர உணவகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம் பெற உள்ளதாக ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத்தின் ராகேஷ் குமார் வாத்வான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம் அடுத்த 48 மாதங்களில் ரூ.4,000 கோடி முதலீட்டில் மேற்கொள்ளும் இந்த தகவல் தொழில் நுட்ப நகரத்தின் மூலம் 60,000 பேருக்கு நேரடியாகவும், 1,50,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தகவல் தொழில் நுட்பம், அதனைச் சார்ந்த நிறுவனங்களில் இந்தியாவிலும், பல அயல் நாடுகளிலும் உள்ள பெரிய நிறுவனங்கள் கொச்சியில் நிறுவனங்களைத் தொடங்க ஆர்வமாக உள்ளதாகவும், இந்த நிறுவனங்கள் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இத்துறை நிறுவனங்களை அமைக்க விரும்பும் இடங்களில் நாஸ்காம் பட்டியலில் கொச்சி இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இத்துறைகளில் 5 லட்சம் பணியிடங்கள் கேரளாவில் உருவாகும் என்று நாஸ்காம் தெரிவித்துள்ளதைச் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன் அரசுக்கு பதிவு, முத்திரைத்தாள், தொழிலாளர் நலன்,கிராம வரி ஆகியவற்றின் மூலம் ஆண்டுக்கு 425 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதால் உள்ளூர் இயற்கை ஆதாரங்கள், உள்கட்டமைப்பு ஆகியவை பாதிக்காத வகையில் ஜெர்மன் தொழில் நுட்பத்திலான கழிவு நீர் சுத்திகரிப்பு மையம், மின்சார உள்கட்டமைப்பு ஆகியவை தனியாக இந்த தகவல் தொழில் நுட்ப நகரில் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.
கொச்சியை பெங்களூரைப் போன்று மாற்றப் போவதில்லை. ஏனென்றால் பெங்களூரின் பண்பாடு, பழக்க வழக்கம் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களால் மாற்றப்பட்டுள்ளது. அதைப் போன்ற நிலை வரக் கூடாது என்பதால் இந்த நகரில் 70 விழுக்காடு இடங்கள் தகவல் தொழில் நுட்பம், அதனைச் சார்ந்த நிறுவனங்களுக்கும்,மிதியுள்ள 30 விழுக்காடு இடத்தில் மற்ற தொழில்கள் உள்ளிட்ட பிற பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படும் என ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத்தின் ராகேஷ் குமார் வாத்வான் தெரிவித்துள்ளார்.