நமது நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் நியாயமான புகார்கள் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் புதிய இணையதளத்தை கிரண் பேடி துவக்கியுள்ளார்.
நமது நாட்டின் முதல் பெண் காவல் அதிகாரியான கிரண் பேடி அண்மையில் விருப்ப ஓய்வு பெற்றார். பின்னர் தனது இந்தியா விஷன் ஃபவுண்டேசன் அமைப்பின் மூலமாக பல்வேறு நலப் பணிகளில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில், காவல் நிலையங்களில் உண்மையான புகார்கள் பதிவு செய்யப்படுவதில்லை என்றும், இதன்மூலம் குற்றங்கள் மறைக்கப்படுகின்றன என்றும் அவர் குற்றம்சாற்றியுள்ளார்.
இதனால், நியாயமான புகார்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் www.saferindia. com என்ற இணையதளத்தை கிரண் பேடி துவக்கியுள்ளார்.
தலைநகர் புதுடெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் தனது இணையதளத்தைத் துவக்கி வைத்த கிரண் பேடி, "போதிய வசதியின்மையால் தன்னால் எல்லாப் புகாரையும் விசாரிக்க முடியவில்லை என்று எந்தக் காவல் அதிகாரியும் கூறவில்லை. ஆனால், எல்லாப் புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் யாரும் ஒப்புக் கொள்ளவில்லை" என்றார்.
மேலும், காவல் நிலையங்களில் புகார்கள் எவ்வாறு மறைக்கப்படுகின்றன, கைவிடப்படுகின்றன என்பதன் விவரங்களையும் அவர் வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த இணையதளம், சாதாரண மக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் ஒரு நல்ல பிணைப்பு ஏற்படுவதை உறுதி செய்யும்.
ஏற்கெனவே காவல் நிலையத்திற்கு உண்மையான புகாருடன் சென்று, அப்புகார் பதிவு செய்யப்படாமல் உள்ளவர்கள் மட்டுமே இந்த இணையதளத்தை பயன்படுத்த முடியும்.
நியாயமான புகார்கள் ஆய்வுக்குப் பிறகு, காவல்துறை தலைவர், ஆணையர்களுக்கு அனுப்பப்படும். முன்னதாக, புகாரைப் பதிவு செய்ய விரும்புபவர்கள், தங்களின் எல்லா விவரங்களையும் கண்டிப்பாகத் தரவேண்டும்.
புகார் அனுப்பியவர் தனக்கு ஆதாரமாக இணையதளப் பக்கத்தை அச்சிட்டு வைத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் புகாரின் நிலையை அறியவும் இதைப் பயன்படுத்தலாம்." என்றார்.
இந்த முயற்சிக்கு யாரெல்லாம் உதவியாக இருப்பார்கள் என்று கேட்டதற்கு, "மத்திய அரசு வழக்கறிஞர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள், கல்லூரி மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் அடங்கிய இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.
அதேநேரத்தில் இந்த இணையதளம் காவல்துறைக்கு உதவியாக இருக்குமே தவிர போட்டியாக இருக்காது என்று குறிப்பிடவும் கிரண் பேடி தவறவில்லை.