தகவல் தொழில்நுட்பத் துறையை பொறுத்த மட்டில் 2007 ஆம் ஆண்டு எழுச்சியற்ற ஆண்டாகிப் போனதால், பிறக்கப்போகும் 2008- ம் ஆண்டு நல்லவற்றைக் கொண்டு வரும் என அத்துறையினர் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்ற முதுமொழிக்கேற்ப, இந்திய தொழில்களில் எல்லாவற்றையும் விட தகவல் தொழில் நுட்பத்துறை கடந்த ஆண்டுகளில் சிறப்பாக இருந்ததாக கூறப்பட்ட வர்த்தகம், இந்த ஆண்டு இல்லாமல் போனது. இதற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு கிடைக்கும் பதில் டாலருக்கு எதிரான ரூபாயின் ஏற்றம்தான்.
இந்த ஆண்டு முழுவதுமே இத்துறையில் வளர்ச்சியற்ற நிலையே காணப்பட்டது. இதனால் அடித்தட்டில் உள்ள நிறுவனங்கள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகின. கடந்த ஆண்டுகளில் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்பவர்கள் தேர்வு செய்யும் பங்குகளில் தொழில்நுட்பம் முதன்மையாக இருந்ததுடன், நாட்டின் வளர்ச்சியிலும் முக்கியத் துறையாக விளங்கிய நிலை 2007ல் முற்றிலும் தலைகீழானது.
நடப்பு நிதியாண்டில் ரூபாயின் மதிப்பு 12 விழக்காடு உயர்ந்துள்ளது. டாலருக்கு எதிரான ரூபாயின் இந்த உயர்வால் நாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அயல் அலுவலக பணித்துறை (BPO), சிறு - நடுத்தர மென் பொருள் ஏற்றுமதி நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின. மேலும் சிறு - நடுத்தர மென் பொருள் ஏற்றுமதியாளர்களின் வளர்ச்சித் திட்டங்களையும் இது பாதித்தது.
மிகக்குறைந்த லாபத்துடன் ஏற்றுமதி செய்து வந்த நிலையில் ரூபாயின் மதிப்பு உயர்வு மென் பொருள் ஏற்றுமதி தொழிலை வெகுவாக பாதித்தது. டாலருக்கு எதிரான மதிப்பு 0.5 - 0.6 விழுக்காடு ஒவ்வொரு ரூபாய்க்கும் உயரும் போதும் லாபத்தில் குறைவு ஏற்பட்டது.
இதே நிலை தொடருமானால், எதிர்காலத்தில் அயல் அலுவலக பணிகளை மேற்கொள்ள, தற்போது உலக நாடுகளின் விருப்ப இடமாக உள்ள நிலையை இந்தியா தக்கவைத்துக் கொள்வது சற்றுக் கடினமானது என்று நாஸ்காம் தலைவர் கிரண் கார்னிக் தெரிவித்துள்ளார்.
இதனை எதிர்கொள்ள அரசு வரிச் சலுகைகளை தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்களுக்கு வழங்குவதோடு, தகவல் தொழில் நுட்ப பூங்காக்களில் உள்ள நிறுவனங்களுக்கும் 2009 -ஆம் ஆண்டு வரை இச்சலுகையை நீட்டித்து தர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதனிடையே நடப்பாண்டுக்கான தகவல் தொழில் நுட்ப ஏற்றுமதி இலக்கையும், 2010-ம் ஆண்டுக்கான 60 பில்லியன் டாலர் இலக்கையும் எட்ட முடியம் என்று கிரண் கார்னிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக உயர்ந்ததைத் தொடர்ந்து உலகின் முன்னணி ஏற்றுமதி நிறுவனங்களான இன்போஃசிஸ், விப்ஃரோ, டி.சி.எஸ். ஆகியவற்றின் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் சுனக்க நிலை நீடித்தது. கடந்த 2006 - 07 நிதியாண்டின் இரண்டாவது மூன்று மாதங்களில் 27,000 பேரை பணிக்கு எடுத்த நிறுவனங்களான டி.சி.எஸ். ,இன்போஃசிஸ், விப்ஃரோ, சத்தியம், ஹெச்.சி.எல். ஆகியவை 2007 - 08 நிதியாண்டில் அதே காலத்தில் 25,801 பேரைத்தான் வேலைக்கு அமர்த்த முடிந்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் (2007 - 08) ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில், முந்தைய நிதியாண்டில் 7,741 பேரை வேலைக்கு எடுத்த இன்போஃசிஸ் நிறுவனம், இந்த ஆண்டு 4,530 பேரையும், சத்தியம் கடந்த நிதியாண்டு 4,025 பேரை வேலைக்கு எடுத்தது, இந்த ஆண்டு 3,037 பேரை தேர்வு செய்துள்ளது. இதே காலக் கட்டத்தில் ஹெச்.சி.எல். நிறுவனம் கடந்த ஆண்டு 3,826 பேரையும், இந்த நிதியாண்டில் 3,625 பேரையும் பணிக்கு எடுத்துள்ளது.
மொத்தத்தில் இந்திய பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சிக்கு முன்னோடித் துறையாக கடந்த நிதியாண்டில் கருதப்பட்ட தகவல் தொழில்நுட்பத் துறையில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்ததால் 2007 -ல் வளர்ச்சியற்ற நிலையே காணப்பட்டது. இந்த ஆண்டில் ஏற்பட்ட அனுபவங்களை பாடமாக கொண்டு 2008 -ஆம் ஆண்டில் இத்துறை மீண்டும் பீடுநடை போட வேண்டும். அதற்கு அரசும், தனியார் தொழில் முனைவோரும் இணைந்து செயல்பட முன்வர வேண்டும்.