நமது கண்கள் இதுவரை பிறரின் மனக் கதவுகளைத்தான் திறந்த வந்தன. ஆச்சர்யப்பட வேண்டாம், இனி அவை வங்கிகளின் லாக்கர் கதவுகளையும், கணினியில் நிரல்களின் கதவுகளையும் திறக்கும்.
ஆஸ்ட்ரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்கள், கண்களை அடையாளமாகப் பயன்படுத்தும் புதிய ஸ்கேனிங் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
நமது கண்களில் உள்ள ஐரிஸ் வரிகள், கை ரேகையைப் போல ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. குறிப்பாக ஒரே நபராக இருந்தாலும் கூட, அவரின் இடது கண்ணில் உள்ளது போன்ற வரிகள் வலது கண்ணில் இல்லை.
இந்த வேறுபாடு நாம் இறக்கும் வரை மாறுவதில்லை என்பதுதான் வியப்பளிக்கும் விடயம். கண்களில் படும் ஒளியின் அளவைப் பொறுத்து ஐரிஸ் வேறுபாட்டை துல்லியமாக அளவிட முடியும் என்பது சிறப்பு.
இதனால், கை ரேகையைப் போலவே கண்களையும் அடையாளமாகப் பயன்படுத்த முடியும் என்ற அடிப்படையில்தான் புதிய ஆய்வு அமைந்துள்ளது.
ஐரிஸ் ஸ்கேனிங் தொழில் நுட்பத்தில் நமது கண்களைக் கவனமாக ஆய்வு செய்வதற்கான துல்லியமான சென்சார் கருவிகளும் விளக்குகளும் உள்ளன.
இந்த விளக்குகளில் இருந்து வரும் ஒளி நமது கண்களின் கருவிழிகளைத் தொட்டதும், பியூபில் எனப்படும் பாப்பா விரிகிறது. அப்போது, சென்சார்கள் ஐரிஸ் வரிகளைப் பதிவு செய்து கொள்கின்றன.
பின்னர் ஒவ்வொரு முறை நாம் வரும்போதும், நமது கண்களின் ஐரிஸ் வரிகளை ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள வரிகளுடன் ஒப்பிடுவதன் மூலம் நம்மை அடையாளம் காணமுடியும்.
சுற்றியுள்ள ஒளியால் நமது ஐரிஸ் வரிகளில் ஏற்படும் பாதிப்பும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதை உணர்ந்துள்ள ஆய்வாளர்கள், அதற்கான சிறப்பு நிரல்களை உருவாக்கியுள்ளனர்.
இந்த ஸ்கேனிங் தொழில்நுட்பம் செயலுக்கு வந்தால் வங்கிக் கணக்குகள், கணினி நிரல்கள், அலுவலகக் கதவுகள் என எல்லா வகையான ஆய்வுக்கு உட்பட்ட பகுதிகளிலும் சரியான நபர்களை அடையாளம் காண முடியும்.
இதுபற்றி ஆய்வாளர் பாங் கூறுகையில், "ஒளி அளவைப் பொறுத்து நமது கருவிழியில் உள்ள பாப்பா 0.8 மி.மீ முதல் 8 மி.மீ. வரை விரியக் கூடும். அப்போது வினாடிக்கு 1,200 புகைப்படங்களை எடுக்கும் திறனுடைய கேமராவைப் பயன்படுத்தினால் ஐரிஸ் வரிகளை துல்லியமாகப் படமெடுக்க முடியும்" என்றார்.