மியான்மர் நாட்டின் தலைநகரம் இரங்கூனில் (யாங்கூன்) அமைக்கப்பட உள்ள இந்திய - மியான்மர் தகவல் தொழில் நுட்ப மையத்திற்கான ஒப்பந்தம் இன்று புதுடெல்லியில் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் அந்நாட்டின் துணை அமைச்சர் கியாதுவும், இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கர் மேனனும் கையெழுத்திட்டுள்ளனர். இரங்கூனில் அமைக்கப்பட உள்ள இந்த தகவல் தொழில்நுட்ப மையத்தை அமைப்பதற்கு தேவையான ஆலோசனைகளையும், நிதியுதவிகளையும் இந்தியா வழங்கும்.
மியான்மர் துணை அமைச்சருடன் இந்தியா வந்துள்ள அந்நாட்டுக் குழுவினர் இருநாடுகளுக்கு இடையேயான அயலுறவு குறித்து, இந்திய அயலுறவுத் துறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்த உள்ளனர். முன்னதாக கியாது, அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து இருநாடுகளுக்கிடையே நிலவும் நட்புறவு குறித்து பேச்சு நடத்தினார்.
இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை 1600 கி.மீ.ஆகும். இந்தியா - மியான்மர் இடையே மொத்த இருதரப்பு வர்த்தகத்தின் அளவு 100 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.