விமானங்கள் வெளியேற்றும் கரியமில வாயுக்களின் அளவைக் காட்டிலும், தற்போது கணினி சர்வர்களில் இருந்து வெளியேறும் கரியமில வாயுக்களின் அளவு சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று இங்கிலாந்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது.
ஒரு கேலன் எரிபொருளுக்கு 15 மைல்கள் செல்லும் வாகனம் எந்த அளவு கரியமில வாயுவை வெளியேற்றுமோ அந்த அளவுக்கு ஒரு கணினி சர்வர் கரியமில வாயுவை வெளியேற்றுவதாக இந்த அமைப்பின் இயக்குநர் டெர்வின் ரெஸ்டோரிக் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் 100 கோடி கணினிகள் உள்ள நிலையில் சர்வதேச கணினி நிறுவனங்கள் ஆண்டுதோறும் மனிதன் வெளியேற்றும் கரியமில வாயுவில், அதாவது உலகம் முழுவதும் இயக்கப்படும் விமானங்களில் இருந்து வெளியேற்றப்படும் இரண்டு விழுக்காடு கரியமில வாயு அளவுக்குச் சமமானது என்றும், இதற்கு அந்த நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
வாடிக்கையாளர், பயன்படுத்துபவரின் தகவல்களை கணினி சர்வர்களில் பாதுகாத்து வைக்கவே அதிகப்படியான எரிசக்தி பயன் படுத்தப்படுவதாகவும், விமான நிறுவனங்களை மிஞ்சும் அளவில் வணிகரீதியான தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இங்கிலாந்தில் உள்ள கணினி நிறுவனங்கள் எந்த அளவுக்கு தங்களால் வெளியேற்றப்படும் கரியமில வாயு குறித்து தெரிந்து உள்ளனர் என்பது தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர் என்றும் கூறினார்.
இந்த ஆய்வில் அங்கு பணியாற்றும் 50 விழுக்காடு தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதைத் தெரிந்து வைத்துள்ளனர். 86 விழுக்காட்டினருக்கு தங்கள் செயல்பாடுகளின் மூலம் வெளியேறும் கார்பன் அளவு குறித்து எதுவும் தெரியவில்லை. 3-ல் இரண்டு பங்கு பிரிவுகளுக்கு, தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கான கட்டணத்தை மற்ற பிரிவுகள் செலுத்துவதாகவும் கூறினர். 50 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் எரிசக்தி கட்டணத்துக்கான ரசீதை கூட பார்த்ததில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
சேமிப்பு வசதியை மேம்படுத்தினால் மட்டுமே எரிசக்தியை மிச்சம் செய்ய இயலும் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 60 விழுக்காடு துறையினர் சேமிப்பு முழுபயன்பாட்டில் 50 விழுக்காடு அளவுக்குத்தான் பயன்படுத்துவதாக கூறியுள்ளனர். மற்றொரு 37 விழுக்காட்டினர் அளவுக்கும் அதிகமான அளவில் தகவல்களை சர்வர்களில் சேமித்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். எரிசக்தி பயன்பாடு, தகவல் சேமிப்பு ஆகியவற்றின் திறனை மட்டும் அதிகரித்தாலே, வணிக ரீதியாக தற்போது பயன்படுத்தப்படும் எரிசக்தியில் 30 விழுக்காடு அளவுக்கு எரிசக்தி தேவையை குறைக்க இயலும் என்று டெர்வின் ரெஸ்டோரிக் தெரிவித்துள்ளார்.