அதிகரித்துவரும் இணையதள செய்தி ஊடகங்களையும், நாளிதழ்களின் இணையதளப் பதிப்புகளையும் சட்டத்தின் கீழ் கொண்டுவரும் வகையில் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் உருவாக்கப்பட்ட 140 ஆண்டுகள் பழமையான பத்திரிகை மற்றும் புத்தகங்கள் பதிவுச்சட்டம்(PRB Act) திருத்தப்பட உள்ளது.
1867 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிஆர்பி சட்டம் அச்சிடப்பட்ட புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளை மட்டுமே இன்றுவரை கட்டுப்படுத்தி வருகிறது. இணையதள செய்தி ஊடகங்கள், நாளிதழ்களின் இணையதளப் பதிப்புகள் ஆகியவை இச்சட்டத்தின் அதிகாரத்தின் கீழ் வராது.
இதுகுறித்து தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில் "பத்திரிகை உலகம் இன்னும் தாள்களுக்குள் நிற்கும் என்று கூறமுடியாது. செய்தி உலகம் தாள்களுடன் கணினித் திரைகளுக்குள்ளும் விரிந்து வருகிறது. ஒப்பளிக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகள் மூலம் வெகு தொலைவில் உள்ள நகரங்களுக்கும் செய்திகள் சென்றடைகின்றன" எனறார்.
பெருகிவரும் இணையதள செய்தி ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்று கேட்டதற்கு அந்த அதிகாரி மறுப்புத் தெரிவித்தார்.
மேலும், புதிய நிருவாக முறைகள், உரிமைத் தந்திரங்கள் ஆகியவற்றுடன் இணைந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவகையில் பழைய சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்பது குறித்துதான் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றார்.
இப்போது இருக்கும் சட்டம் ஒரு ஒழுங்குமுறைச் சட்டமாகும். ஆனால் திருத்தப்பட்ட பிறகு வரும் சட்டம், அச்சு ஊடகத் தொழிலைப் பாதிக்காத வகையில் கூடுதல் வசதிகளை வழங்கும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.