பொறியியல் கல்வியை தகவல் தொழில் நுட்பத் துறைக்கு ஏற்றதாக மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்று நேஸ்காம் தலைவர் கிரன் கார்னிக் தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டிணத்தில் திங்களன்று நடைபெற்ற நேஸ்காம் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய அவர், நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் ஒரு குறிப்பிட்ட திறனை வளர்ப்பதோடு மட்டுமல்லாது புதுமையான கண்டுபிடிப்புகளை மாணவர்கள் உருவாக்குவதை ஊக்கப் படுத்தும் விதத்தில் பாடத் திட்டங்களை வகுக்க வேண்டும்.
தகவல் தொழில் நுட்பத் துறையில் புதிது புதிதாகப் பல மாற்றங்கள் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இன்று புதிதாய்த் தோன்றும் ஒரு தொழில் நுட்பம், மிகக் குறுகிய கால இடைவெளியில் காலாவதியாகி உயர் தொழில் நுட்பம் அறிமுகமாகி விடுகிறது.
இத்தகைய மாறுதலுக்கு மாணவர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவும், புதுமையாக சிந்தித்து செயலாற்றவும், வெற்றிகரமாகத் திகழவும் வழிகாட்டுவது அவசியம். ஒரு குறிப்பிட்ட துறையில் திறன் பெறுவதோடு நின்று விடாது, தொடர்ச்சியாகப் புதிய விஷயங்களைக் கற்க வேண்டியதன் அவசியத்தை மாணவர்களுக்கு உணர்த்துவது நம் கடமையாகும்.
தகவல் தொழில் நுட்பத் துறை, கல்வி நிறுவனங்கள், அரசு என அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து இதற்கான முன்முயற்சியில் ஈடுபடுவது அவசியம் என்றார்.