பி.எப். பிடித்தம் செய்வதற்கான சம்பள வரம்பை உயர்த்த திட்டம்?
, சனி, 12 அக்டோபர் 2013 (13:07 IST)
பி.எப். பிடித்தம் செய்வதற்கான சட்டப்பூர்வ மாத சம்பள வரம்பை ரூ.6,500-லிருந்து ரூ.15,000-ஆக உயர்த்துவது குறித்து மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது.தற்போதுள்ள நிலையில் மாத சம்பள வரம்பில் 24 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் சேர்க்கப்படுகிறது. இதில் 8.33 சதவீதம் ஓய்வூதிய திட்டத்திற்கு சென்று விடுகிறது. ஓய்வூதிய நிதிக்காக மத்திய அரசு 1.16 சதவீதத்தை மானியமாக வழங்குகிறது.பி.எப். பிடித்தம் செய்வதற்கான மாத சம்பள வரம்பை ரூ.15,000-ஆக உயர்த்துவதால் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.90,000 கோடி கிடைக்கும். இந்த நிதியை, இந்த அமைப்பு மத்திய அரசின் கடன் பத்திரங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதி நிறுவனங்கள் வெளியிடும் கடன்பத்திரங்களில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது.நம் நாட்டில் வங்கி சாரா நிதி துறையில் எல்.ஐ.சி.க்கு அடுத்தபடியாக இ.பி.எஃப்.ஓ. அமைப்பிடம்தான் அதிக நிதி உள்ளது.நிதி பற்றாக்குறை அதிகமாக உள்ளதால் மத்திய அரசு நடப்பு நிதி ஆண்டில் கடன்பத்திரங்கள் வெளியீடு வாயிலாக ரூ.4.84 லட்சம் கோடி திரட்ட முடிவு செய்துள்ளது. புதிய விதிமுறை அமலுக்கு வந்தால் இ.பி.எப்.ஓ. அமைப்பு மட்டும் கடன்பத்திரங்களில் கூடுதலாக ரூ.50,000 கோடி முதலீடு செய்யும்.கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து பி.எப். பிடித்தத்திற்கான சம்பள வரம்பை ரூ.15,000-ஆக உயர்த்தும்படி பாராளுமன்ற கமிட்டியும், இ.பி.எஃப்.ஓ. அமைப்பும் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. இதனை நிதி அமைச்சகம் அப்போது ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால், இதனால் ஓய்வூதிய திட்டத்திற்கான மத்திய அரசின் மானியச் சுமை ரூ.1,100 கோடியிலிருந்து (ஆண்டிற்கு) ரூ.3,000 கோடியாக உயரும்.