Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தரச்சட்டம்-2006 பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கக்கூடியது.

Advertiesment
தரச்சட்டம்-2006 பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கக்கூடியது.
மதுரை : , சனி, 25 ஜூலை 2009 (15:49 IST)
உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம், பன்னாட்டு பெரிய நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்ககூடிய வகையில் உள்ளது என்று உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க செயலாளர் கூறினார்.

தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் கவுரவ செயலாளர் சுபாஷ்சந்திரபோஸநேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியா உணவு சார்ந்த தொழிற்துறையில் உலகச் சந்தையில் முன்னிலை வகிக்கிறது. அரிசி, பால், சர்க்கரை, தேயிலை, காய்கறிகள், பழங்கள், மீன், முட்டை, இறைச்சி ஆகிய பொருட்களின் உற்பத்தியிலும் இந்தியா முன்னிலை வகிக்கின்றது.

இந்த பொருட்கள் விவசாயம் சார்ந்த பொருட்களாகும். இதில் 65 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்தநிலையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள "உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம்-2006, இந்திய உணவுத்தொழிற்துறைக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் உள்ளது. இந்த அறிவிப்பு உணவுத்துறையில் சிறிய உற்பத்தியாளர்களை பூண்டோடு அழித்துவிட்டு, பன்னாட்டு பெரிய நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பதாக உள்ளது.

தற்போது அமலில் உள்ள உணவு கலப்பட தடைச்சட்டமே, உணவுப்பொருள் தயாரிப்பாளர்களுக்கு பலவித கஷ்டங்களை தருகின்றது. இந்நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்டம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இந்த புதிய சட்டம் உணவு தயாரிப்பு தொழிலை முற்றிலும் அழித்து விடுவதோடு, இதனை நம்பி வாழும் தொழிலாளர்கள் வாழ்வை இருளடையச் செய்யும்.

மேலும் இந்த சட்டத்தை அமலாக்கத்தை கண்காணிக்க அரசால் அமைக்கப்படும் 23 உறுப்பினர்கள் அடங்கிய குழுவில் 2 பேர் மட்டுமே உணவுப்பொருள் சங்கப் பிரதிநிதிகள். இந்த கமிட்டிக்கும் மேலாக நியமிக்கப்பட இருக்கின்ற மத்திய ஆலோசனை குழுவில் 51 உறுப்பினர்களில் 41 பேர் மத்திய, மாநில அரசுகளால் நியமிக்கப்படுவார்கள். இந்த கமிட்டியில் இடம்பெற்றுள்ள 2 பேர் மூலம் உணவுபொருள் தொழிலில் ஏற்படும் நஷ்டங்களை அறியமுடியாது.

எனவே அரசு மூன்றில் 2 பங்கு அனைத்து உணவு பொருள் தொழில் சார்ந்த பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும். மேலும் புதிய உணவு சட்டம் மேலை நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

இப்போதுள்ள கலப்படத் தடைச் சட்டத்தின் மூலம் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டால், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் அபராதமும், குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் நீதிமன்றத்திற்கு அலைய வேண்டும். அதுவே அவருக்கு பெருந்தண்டனையாக அமையும்.

புதிய சட்டத்தில் மூலம் தற்போது ஒரு லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் சிறிய தயாரிப்பாளர் தங்கள் தொழிலை விட்டுச் செல்லும் நிலை ஏற்படும். எனவே அரசு பழைய உணவு பாதுகாப்பு சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வந்தாலே போதும். இது குறித்து நாங்கள் அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம்.

இதுபற்றி அனைவரும் அறியும் வண்ணம் அடுத்த மாதம் சென்னையில் அகில இந்திய உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் கூட்டம் நடக்கிறது என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil