தனியார் வங்கிகளில் அதிக கிளைகளைக் கொண்டு செயல்படும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, கடந்த ஆண்டில் இரண்டு முறை ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறியுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
மக்களவையில் நேற்று பிரணாப் முகர்ஜி கூறுகையில், 2007-08 ஆம் நிதி ஆண்டில் , ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்படி வரையறுக்கப்பட்ட விதிகளை ஐசிஐசிஐ வங்கி மீறியுள்ளது. புதிதாக சேமிப்புக் கணக்கு தொடங்குவதில் விதியை மீறி சந்தேகத்துக்கிடமான வகையிலான கணக்குகள் இந்த வங்கியின் பாட்னா கிளையில் தொடங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக 2007 ஆம் ஆண்டு டிசம்பரில் அந்த வங்கிக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதேபோல 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த வங்கியின் ஹாங்காங் கிளையில் முறைகேடான பண பரிவர்த்தனை நடந்துள்ளது என்று அவர் கூறினார்.
ரிசர்வ் வங்கியின் விதியை, பாங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, எச்எஸ்பிசி வங்கி, செஞ்சூரியன் வங்கி ஆகியவைகளும் மீறியுள்ளதாக பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.