உலக அளவிலான மூங்கில் வர்த்தகத்தில், 2015 ஆம் ஆண்டில் இந்தியாவின் பங்கு 570 கோடி டாலராக உயர வாய்ப்புள்ளது என்று மாநில வனக் கல்லூரி முதல்வர் ஜோஸ் பி.மேத்யூ தெரிவித்தார.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வன மரபியல் மற்றும் வன பெருக்க நிறுவனத்தில், மாநில அளவிலான மூங்கில் வளர்ப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
இதை திங்கள்கிழமை மேத்யூ துவக்கிவைத்து பேசுகையில், உலக மூங்கில் வர்த்தகத்தில், இந்தியாவின் பங்கு தற்போது 100 கோடி டாலராக உள்ளது. இது 2015 ஆம் ஆண்டு வாக்கில் 570 கோடி டாலராக உயர வாய்ப்புள்ளது.
இந்த மூங்கில் வளர்ப்பு பயிற்சியில் பங்கேற்றுள்ள தோட்டக்கலை அலுவலர்கள் இதை விவசாயிகளுக்கு கற்றுத்தர வேண்டும் என்று கூறினார்.
புதுதில்லி தேசிய மூங்கில் ஆணையத்தின் நிதி உதவியுடன் இப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
இந்த பயிற்சி வகுப்பில் திருவண்ணாமலை, நாமக்கல், கோவை, திருநெல்வேலி, திண்டுக்கல், நாகப்பட்டிணம், விருதுநகர், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 42 தோட்டக்கலை அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த பயிற்சி வகுப்பு பிப்.13 ஆம் தேதி வரை நடைபெறும்.
இதில் மூங்கில் பெருக்கம், திசு மூங்கில் வளர்ப்பு, மூங்கிலில் நோய் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள், இயற்கை உரங்கள் மூலம் மூங்கில் சாகுபடி, மூங்கில் பராமரிப்பு உள்ளிட்ட பயிற்சி வழங்கப்படுகிறது.