இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் நில வழியாக, ஆப்கானிஸ்தானத்திற்கு பொருட்களை அனுப்ப, நாளை நடைபெற உள்ள வர்த்தக செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது.
சார்க் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பூடான், நேபாளம், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு ஆகிய எட்டு நாடுகள் இடம் பெற்றுள்ளன.
புது டெல்லியில் நாளை சார்க் நாடுகளின் வர்த்தக துறை செயலாளர்கள் மட்டத்திலான கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் வர்த்தக துறை செயலாளர் சுலைமான் கானி பங்கேற்கிறார்.
மும்பை தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானில் இருந்து முதன் முறையாக உயர் மட்ட அதிகாரி சுலைமான் கானி பங்கேற்கிறார்.
இந்த கூட்டத்தில் சார்க் நாடுகளிடையே சரக்கு போக்குவரத்திற்காக வசதிகளை விரிவு படுத்துவது பற்றி ஆலோசிக்கப்படும். அத்துடன் தென் கிழக்காசிய தாராள வர்த்தக உடன்படிக்கை குறித்து சார்க் நாடுகளின் நிபுணர்கள் குழு அளித்த சரக்கு போக்குவரத்து, சேவை துறைகளை விரிவு படுத்துதல் ஆகியவை பற்றி அளித்த அறிக்கை பற்றியும் விவாதிக்கப்படும்.
இந்த நிபுணர்கழு அறிக்கை பற்றிய கருத்துக்களை, வர்த்தக செயலாளர்கள் தெரிவிப்பார்கள்.
இது கொழும்புவில் பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ள சார்க் அயலுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும்.
புது டெல்லியில் நாளை நடைபெற உள்ள கூட்டத்தில், ஆப்கானிஸ்தானத்திற்கு பாகிஸ்தான் வழியாக சரக்குகளை அனுப்ப, பாகிஸ்தான் சாலை வழியை அனுமதிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தும் என்று தெரிகிறது.
இந்தியா ஏற்கனவே இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது. ஆனால் தனது சாலை வசதியை பயன் படுத்திக் கொள்ள அனுமதிக்க முடியாது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
இதற்கு பதிலாக கராச்சி துறைமுகத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பதாக தெரிவித்துள்ளது.