நரிக்குடி வட்டாரத்தில் நிலக்கடலை பயிருக்கு 50 விழுக்காடு மானிய விலையில் ஜிப்சம் உரம் விநியோகம் செய்யப்படும் என, நரிக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மு. சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டு ராபி பருவத்தில் நரிக்குடி வட்டாரத்தில் 2,200 ஹெக்டேர் பரப்பில் நிலக்கடலை பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது இவை 45 முதல் 50 நாள் பயிராக உள்ளது.
இந்நிலையில், இரண்டாம் முறை களை எடுக்கும்போது ஹெக்டேருக்கு 200 கிலோ ஜிப்சம் உரமிட்டு மண் அணைக்க வேண்டும்.
ஜிப்சம் உரத்தில் உள்ள கால்சியம் சத்தினால் காய்கள் திரட்சியாகவும், சல்பர் சத்தினால் எண்ணெய் சத்து கூடுதலாகவும் கிடைப்பதால் விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கும்.
ஜிப்சம் உரமானது, நரிக்குடி வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலம் ஐசோபாம் எண்ணெய் வித்து பெருக்க திட்டத்தின் கீழ், 50 விழுக்காடு மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது.
மேலும், இத்திட்டத்தின்கீழ், நிலக்கடலை பயிரைத் தாக்கக்கூடிய பூச்சிகளைக் கட்டுப்படுத்த உயிரியல் பூச்சிக் கொல்லி மருந்துகளான வேம்பு மருந்துகளும் 50 விழுக்காடு மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது.
எனவே, தேவையான விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு உதவி இயக்குநர் மு. சக்கரவர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.