Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பட்ஜெட்-வேலை வாய்ப்புத் துறைகளுக்கு சலுகை

Advertiesment
பட்ஜெட்-வேலை வாய்ப்புத் துறைகளுக்கு சலுகை
புது டெல்லி , திங்கள், 9 பிப்ரவரி 2009 (15:59 IST)
உலக அளவில் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வளர்ச்சியின் தேக்க நிலையால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் குறைந்துள்ளது.

உள்நாட்டில் வளர்ச்சி மந்த நிலையில் இருப்பதால், பெரிய நிறுவனங்கள் ஊழியர்களை நடவடிக்கையில் இறங்கியுள்ளன. சில நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்து விடுமுறை அளிக்கின்றன. சில நிறுவனங்கள் குறிப்பிட்ட கிளைகளை மூடுகின்றன. ஜவுளி,ஆயத்த ஆடை, பின்னலாடை ஏற்றுமதி குறைந்துள்ளது. இவை அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வந்தது. தற்போதையை நிலைமையால், இவற்றில் வேலை பார்த்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அதிக அளவு வேலை வாய்ப்பை வழங்கும் துறைகள் பாதிக்கப்படாமல் இருக்க, மத்திய நிதி நிலை அறிக்கையில் (பட்ஜெட்) சலுகைகளை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தவிர, ஏற்றுமதி சார்ந்த துறைக்கும் சலுகைகள் அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பதவிக் காலம் இந்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது.

இந்த அரசின் இறுதி பட்செட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுவும் முழுமையான பட்ஜெட்டாக இருக்காது. இடைக்கால பட்ஜெட்டையே தாக்கல் செய்ய முடியும்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் வருகின்ற 12 ஆம் தேதி தொடங்குகிறது. இதுவே கடைசி கூட்டமுமாகும்.

முதல்நாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீல், மக்களவை, மாநிலங்களவையின் கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார்.

அடுத்த நாள் 13 ஆம் தேதி ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத், ரயில்வே இடைக்கால நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்கிறாரா.

அதைத் தொடர்ந்து 16 ஆம் தேதி மூத்த அமைச்சரும், அயலுறவு அமைச்சருமான பிரணாப் முகர்ஜி, மத்திய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வார்.

பிரதமர் மன்மோகன் சிங் வசம் நிதி அமைச்சகம் உள்ளது. பிரதமர் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் உள்ளார். எனவே பிரணாப் முகர்ஜி பட்ஜெட்டை தாக்தல் செய்வார்.

இதில் பொருளாதார மந்த நிலையை போக்குவதற்காக பல துறைகளுக்கு சலுகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்றுமதி சார்ந்த ஜவுளி, ஆயத்த ஆடை, ஆபரணங்கள், வைர கற்கள் உட்ப அதிக அளவு வேலை வாய்ப்பை வழங்கும் துறைகளுக்கு அதிக சலுகைகள் அளிக்கப்படும்.

இதே போல் கட்டுமானம், ஆட்டோமொபைல் மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்கு சலுகை அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இது குறித்து பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் சுரேஷ் டெண்டுல்கர் கூறுகையில், இத்துறைகளில் அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஏற்றமதி தேக்கத்தால், இத்துறையில் ஊழியர்கள் குறைப்பை தவிர்ப்பதற்காக அரசு சலுகைகளை அறிவிக்க உள்ளது. இதன் மூலம் மேலும் பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு மேலும் வட்டிக் குறைப்பு அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிடும் என்று தெரிவித்தார்.

கிரிசில் ஆய்வு நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் டி.கே. ஜோஷி, மறைமுக வரி குறைக்கப்படும் என்றாலும் வருமான வரி குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார்.

யெஸ்' வங்கி தலைமை பொருளாதார நிபுணர் சுப்ரதா ராவ் கூறுகையில், பொருளாதார தேக்க நிலை காரணமாக வரிக் குறைப்பு நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று தெரிவித்தார்.

ஆனால் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக பேராசிரியர் ஜெயந்தி கோஷ் கருத்து தெரிவிக்கையில், இடைக்கால பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சிக்கான சலுகைகள் குறித்த அறிவிப்பை வெளியிட முடியாது என்று கூறினார்.

பிரணாப் முகர்ஜி ஏற்கனவே, வேலை வாய்ப்புகளை அளிக்கும் துறைகளுக்கு சலுகை அளிக்கப்படும். வரும் ஆண்டிலும் உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவின் தாக்கம் நீடிக்கும் என்பதால், உள்நாட்டில் உள்ள தொழில்களைக் காப்பாற்ற இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

டாவோசில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டில் பங்கேற்று திரும்பிய திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவும், சர்வதேச பொருளாதார நிலை மிக மோசமாக உள்ளது. எனவே சலுகைத் திட்டம் மேலும் ஓராண்டுக்கு அளிக்க வேண்டியிருக்கும் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil