மீன், நண்டு போன்ற கடல்சார் உணவு ஏற்றுமதி மூலம், நாட்டிற்கு ரூ.8 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணி வருவாய் கிடைப்பதாக மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் தெரிவித்தார்.
மும்பையில் மீன் போன்ற கடல் உணவு குறித்த தகவலை திரட்டும் பிஷரி சர்வே ஆப் இந்தியா [Fishery Survey of India (FSI)] அமைப்பின் வைர விழா நிகழ்ச்சியில் இன்று சரத்பவார் பேசும் போது, விவசாயம், அதன் தொடர்பான துணை தொழில்களில் அதிக பட்சமாக அந்நியச் செலவாணி ஈட்டுத்தரும் துறைகளில் கடல்சார் உணவு ஏற்றுமதி முக்கிய இடத்தை வகிக்கிறது என்றார்.
அவர் மேலும் பேசுகையில், இந்த அமைப்பின் உதவியுடன், மத்திய அரசு அமல்படுத்திய திட்டங்களால், 1950 ஆம் ஆண்டு 5 லட்சம் டன்னாக இருந்த மீன் உற்பத்தி, தற்போது வருடத்திற்கு 30 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
தற்போது கடல் சார் உணவுப் பொருட்கள், உள்நாட்டு தேவைகளை நிறைவேற்றுவதுடன், தரமான கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மத்திய வேளாண் அமைச்சகம் 2005-05 ஆம் ஆண்டு, கடலில் டூனா ரக மீன் கிடைப்பது பற்றி ஆராய இரண்டு கப்பல்களை வாங்கியது. தற்போது குறைந்த ஆழம் உள்ள கடல் பகுதிகளில் உள்ள மீன் வளத்தைப் பற்றி ஆய்வு செய்ய இரண்டு கப்பல்கள் வாங்கப்படும்.
இந்த மாதிரியான ஆய்வு நிலையங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வு, மேம்பாட்டு நடவடிக்கைகள் மூலம் கடல்சார் உணவு துறை தொழில்களை மேம்படுத்துவதுடன், உற்பத்தியை பல மடங்கு உயர்த்த முடியும் என்று கூறினார்.
இந்தியாவில் மீன் பிடி தொழிலை நவீனப்படுத்தவும், மீன் உற்பத்தி அதிகரிக்க கடைப்பிடிக்கப்பட்ட திட்டங்களை பற்றி விளக்கிய சரத்பவார், இந்த ஆய்வு நிலையத்தில் 30 வருடம் பணியாற்றிய ஊழியர்களை கெளரவப்படுத்தினார்.