பாசி வளர்ப்புத் தொழில் மூலம் கிராம மக்கள் பொருளாதார ரீதியாக வளம் பெற முடியும் என்று நபார்டு வங்கி உதவிப் பொது மேலாளர் ஆர். ஆனந்த் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சி கழக தன்னார்வத் தொண்டு நிறுவனம் மற்றும் நபார்டு வங்கி இணைந்து கும்பங்குடி கிராமத்தில் நடத்திய கிராமங்களில் புதுமை புகுத்துதல் திட்டம் மூலம் புதிய வகை பாசியை அறிமுகம் செய்துவைத்தார்.
அப்போது அவர் பேசிகையில், கிராம மக்கள் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மூலம் வருமானம் பெற போராடி வருகின்றனர். அவர்களுக்கு வரப் பிரசாதமாக குறைந்த செலவில் அதிக லாபம் பெறும் வகையில் ஸ்பைருலினா என்ற செல் புரத பாசி வகை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் மற்ற உணவுப் பொருள்களை விட அதிக புரதச்சத்து நிறைந்துள்ளது. இந்த பாசி உடல் ஆரோக்கியத்தை பெருக்கும் மிக முக்கியமான உணவாகத் திகழ்கிறது. அதனால், விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் இந்த பாசியையே உணவாக எடுத்துக் கொள்கின்றனர் என்பது புதிய செய்தி.
மீன் உணவில் புரதச்சத்து அதிகம் இருப்பதற்கு அவை பாசிகளை முக்கிய உணவாகக் கொள்ளவதே காரணமாகும்.
இப்பாசியை வளர்க்கும் திட்டம் முதல் கட்டமாக இப்பகுதி மக்களுக்குக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை உணவாக பயன்படுத்தலாம். மேலும், சந்தையில் இந்த பாசிப் பொடியை 1 கிலோ ரூ. 1500 வரை விற்பனை செய்ய முடியும். அத்துடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.
இந்த பாசிகள் மண் வளத்தை பாதுகாப்பதுடன் மீன், இரால் மற்றும் கோழிகளுக்கு தீவனமாகவும் பயன்படுகின்றன. எனவே, குறைந்த செலவில் இந்த பாசியை உற்பத்தி செய்து அதிக லாபம் பெற அனைவரும் இதைப் பயிரிட வேண்டும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவர் கே.வி. பெரியகருப்பன் தலைமை வகித்தார். அறிவியல் ஆராய்ச்சி கழக நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ். விஜிகுமார் திட்ட அறிமுகவுரையாற்றினார். ஆராய்ச்சி நெறியாளர் கா. சுபாஸ்ரீ வரவேற்றார், முத்துக்குமாரசாமி நன்றி கூறினார்.