இந்தியாவில் இருந்து இயந்திரம், தளவாடம் போன்ற பொறியியல் (இன்ஜினியரிங்) துறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் ஏற்றுமதி கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
பொறியியல் பொருட்கள் ஏற்றமதி மேம்பாட்டு குழுவின் தலைவர் அமன் சவ்தா [Engineering Export Promotion Council India (EEPC)] கூறுகையில், இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில், பொறியியல் பொருட்களின் பங்கு கடந்த வருடம் 20 விழுக்காடாக இருந்தது.
பொறியியல் பொருட்கள் 33 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
ஆனால் நிதி ஆண்டில் பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி குறைந்துவிட்டது. கடந்த அக்டோபர் மாதத்தில், முந்தைய நிதி ஆண்டில் அக்டோபருடன் ஒப்பிடுகையில் 0.8 விழுக்காடு குறைநத்துள்ளது.
இதனால் ஏற்கனவே பொறியியல் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தற்காலிகமாக [லே-ஆப்] மூடப்படுகிறது. ஏற்றுதியை நம்பி உள்ள பொறியியல் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 20 விழுக்காடு தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 40 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நெருக்கடியை தீர்க்க அரசு சலுகைகளை அறிவிக்க வேண்டும். வங்கிகளில் அதிக அளவு கடன் கிடைக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும். சேவை வரியை திரும்ப வழங்க வேண்டும். ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கும் வசதியை மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும். இந்த தொழிற்சாலைகளை விரிவுபடுத்தவும், தொழில்நுப்ட மேம்பாட்டுக்காகவும் சலுகைகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தோம்.
இதற்கு மத்திய அரசு சாதகமான பதிலை கூறியுள்ளது. ஆனால் இவை அமல்படுத்துவதிலேயே, இதன் வெற்றி உள்ளது. கடந்த 12 முதல் 18 மாதங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். எனவே அரசு விரைவில் சலுகைகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று அமன் சவ்தா கூறினார்.