பாரத ஸ்டேட் வங்கி வீட்டு கடனுக்கான வட்டியை 8 விழுக்காடாக குறைப்பதாக அறிவித்தது.
இந்தியாவின் முன்னணி வங்கியும், பொதுத்துறை வங்கியுமான பாரத ஸ்டேட் வங்கி, [State Bank of India-SBI] புதிதாக வழங்கும் வீட்டு கடனுக்கான வட்டியை 8 விழுக்காடாக குறைப்பதாக நேற்று அறிவித்தது.
புதிதாக வீடு கட்ட, அடுக்கு மாடி குடியிருப்புகளை வாங்குபவர்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு 8% வட்டி வசூலிக்கப்படும். இந்த சிறப்பு வட்டி சலுகை, முதல் வருடத்திற்கு மட்டும் பொருந்தும். அதற்கு பிறகு கடன் வாங்கும் திட்டத்தை பொருத்து கூடுதல் வட்டி வசூலிக்கப்படும்.
இந்த சிறப்பு வட்டி சலுகை பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை வழங்கப்படும் கடனுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்த வங்கியில் ஏற்கனவே கடன் வாங்கியுள்ளவர்களும், புதிய திட்டத்தின் சலுகையை பெறலாம். இவர்கள் ஏற்கனவே வாங்கிய மொத்த கடனில் 10% கடன் தொகைக்கு மட்டுமே, ( அதிகபட்சம் ரூ.5 லட்சம்) இந்த சிறப்பு வட்டி சலுகை வழங்கப்படும்.
தற்போது ரூ.5 லட்சத்திற்கு உட்பட்ட கடனுக்கும், ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரை உள்ள கடனுக்கு வேறு வேறு வட்டி வசூலிக்கப்படுகிறது. இவர்களுக்கும் சிறப்பு வட்டி சலுகை வழங்கப்படும்.
இதே போல் சிறு நடுத்தர தொழில் பிரிவைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் படி, இவைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள ரொக்க கடனில், 20 விழுக்காடு கூடுதலாக வழங்கப்படும். மூலப் பொருட்கள் வாங்க, இவைகளிடம் உற்பத்தி செய்த பொருட்களை வாங்கிய நிறுவனத்தில் இருந்து பணம் பெறுவதில் ஏற்படும் தாமதம் ஆகியவைகளை ஈடு செய்ய கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனுக்கும் ஒரு வருடத்திற்கு சிறப்பு வட்டி சலுகை வழங்கப்படும். இந்த கடனுக்கு 8 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படும்.
இதே போல் இயந்திரங்கள், மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஜெனரேட்டர் போன்றவைகளை வாங்கவும் வட்டி சலுகை வழங்கப்படும். இந்த கடனுக்கும் முதல் வருடம் 8 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படும்.
மத்திய அயலுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை, இன்று வங்கி இயக்குநர்கள், உயர் அதிகாரிகள் சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பின் போது, வங்கி வட்டி குறைப்பது பற்றி முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் நேற்று பாரத ஸ்டேட் வங்கி வட்டியை குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.