டாடா சன்ஸ் நிறுவனத்தின் துணை அமைப்பான டாடா கேப்பிடல் லிமிடெட், டிபன்சர் வெளியிட்டு முதலீடு திரட்டுகிறது.
தொழில், வர்த்தக நிறுவனங்கள் முதலீடு திரட்ட பங்கு பத்திரங்களை வெளியிடுகின்றன. இதே போல் டிபன்சர்களை வெளியிடுகிறது. இந்த டிபன்சர்களில் இரண்டு வகை உண்டு.
குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, பங்குகளாக மாற்றிக் கொள்ளும் டிபன்சர்கள்.
இரண்டாவது வகை பங்குகளாக மாற்ற முடியாத டிபன்சர்கள்.
டாடா கேப்பிடல் நிறுவனம் இரண்டாவது வகை டிபன்சர்களை வெளியிடுகிறது. இதன் மூலம் ரூ.500 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது. இதற்கான விண்ணப்பம் பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த டிபன்சர்களுக்கு பிப்ரவரி 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆனால் தேவையான விண்ணப்பம் வரும் பட்சத்தில், இடையிலேயே விண்ணப்பம் பெறுவதை நிறுத்துவும் முடிவு செய்துள்ளது.
இந்த டிபன்சர் குறித்து டாடா கேப்பிடல் மேலாண்மை இயக்குநர் பிரவின் காட்லி நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த டிபன்சர்களுக்கு கூட்டு வட்டி முறையில் வருடத்திற்கு 12 விழுக்காடு வட்டி வழங்கப்படும். வருடத்திற்கு ஒரு முறை வட்டியை பெறுவதெனில் 11.25% வட்டி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதில் திரட்டப்படும் பணம், இந்த நிறுவனம் செய்யும் முதலீடு, கடன் வழங்கல், ஏற்கனவே உள்ள கடனை திருப்பி செலுத்துதல், உட்பட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளப்படும்.