புது டெல்லி: மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழு, கோதுமையின் குறைந்தபட்ச ஆதார விலையை குவின்டாலுக்கு ரூ.80 அதிகரிக்க ஒப்புதழ் அளித்துள்ளது.
புது டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ரபி பருவத்திற்கு கோதுமை உட்பட பல்வேறு தானியங்களின் ஆதார விலையை அதிகரிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தின் முடிவு குறித்து உயர் அதிகாரி கூறுகையில், தற்போது கோதுமைக்கு குறைந்த பட்ச ஆதார விலை குவின்டாலுக்கு ரூ.ஆயிரம் ஆக உள்ளது. இதை குவின்டாலுக்கு ரூ.1,080 ஆக அதிகரிக்கப்படும்.
இதே போல் பார்லியின் விலை குவின்டாலுக்கு ரூ.35 உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு பார்லிக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவின்டாலுக்கு ரூ. 645 வழங்கப்பட்டது. தற்போது ரூ.35 அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி பார்லிக்கு குவின்டாலுக்கு ரூ.680 வழங்கப்படும்.
அதே போல் சிறு தானியங்களின் குறைந்த பட்ச ஆதார விலை குவின்டாலுக்கு ரூ.130 உயர்த்தப்பட்டுள்ளது. இவைகளுக்கு முன்பு ரூ.1,700 வழங்கப்பட்டது. இனி சிறு தானியங்களுக்கு ரூ.1,730 வழங்கப்படும்.
துவரைக்கு குவின்டாலுக்கு ரூ. 170 உயர்த்தப்பட்டுள்ளது. இனி ரூ.1,870 வழங்கப்படும்.
எண்ணெய் கடுகு விலை குவின்டாலுக்கு ரூ.30 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இனி குவின்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.1,650 வழங்கப்படும்.
அதே நேரத்தில் சாப்ளவர் எண்ணெய் விதையின் விலை உயத்தப்படவில்லை என்று தெரிவித்தார்.
கோதுமை விலையை குவின்டாலுக்கு ரூ.80 மட்டும் உயத்தியுள்ளதற்கு பல்வேறு விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இநத விலை உயர்வு மிக சொற்பமானது என்று விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக பாரத விவசாய சங்கம், லோங்காவால், ராஜுவால், பிசோரா சிங் ஆகியோரின் தலைமையில் இயங்கும் விவசாய சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதே போல் மத்திய அரசு குறைத்துள்ள பெட்ரோல், டீசல் விலை போதாது என்று லாரி போக்குவரத்து சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நேற்று நள்ளிரவு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 2 குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
இதற்கு அகில இந்திய லாரி போக்குவரத்து சங்கத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மொத்த விற்பனை சந்தை தலைவரும், பாரத விவசாயிகள் சங்க தலைவருமான அஜ்மீர் சிங் லோக்வா, பல்வேறு விவசாய சங்கங்கள், அகில இந்திய லாரி போக்குவரத்து சங்க தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு கூறுகையில், தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதார விலை மிக சொற்பமே. அதே போல் பெட்ரோல், டீசல் விலையும் மேலும் குறைக்க வேண்டும் என்று கூறினார்.