தூத்துக்குடி துறைமுகம் ஒரே நாளில் அதிக அளவு யூரியா, மரத்தடிகள் இறக்குமதி செய்து சாதனை படைத்துள்ளது.
தூத்துக்குடி துறைமுகம் சென்ற 21, 25 ஆகிய தேதிகளில் சரக்குகள் கையாளுவதில் புதிய சாதனை படைத்துள்ளது.
வ.உ.சி. மூன்றாவது தளத்தில் சென்ற 21 ஆம் தேதி எம்.வீ. ஹேஞ்சீன் என்ற கப்பலில் இருந்து 9,312 டன் யூரியாவை ஒரே நாளில் இறக்குமதி செய்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்த யூரியா, மும்பையை சேர்ந்த ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அன்ட் பெர்ட்டிலைசர்ஸ் என்ற நிறுவனத்தால் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும்.
இதில் கப்பல் முகவராக இண்டர் ஓசன் ஷிப்பிங் நிறுவனமும், ஸ்டிவிடோராக ஆஸ்பின்வால் நிறுவனமும் செயல்பட்டன.
இதற்கு முன்பு 2007 ஜுன் மாதம் 23 ஆம் தேதி எம்.வீ. ஸ்டார் கெனோபஸ் என்ற கப்பலில் இருந்து 8,069 டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இதே போல் சென்ற 25 ஆம் தேதி நியூசிலாந்தில் இருந்து 5,016 டன்கள் அன்னாசி மரத்தடிகளை எட்டாவது கப்பல் தளத்தில் எம்.வீ. கிரேட் கெய்ன் என்ற கப்பலில் இருந்து ஒரே நாளில் இறக்கி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இது ஜனவரி மாதம் 5 ஆம் தேதி அன்று, எம்.வீ. ஷாங் யீ கப்பலில் இருந்து ஒரே நாளில் கையாளப்பட்ட 3,633 மரத்தடிகளைவிட கூடுதலாகும்.
இதில், கப்பல் முகவராக பரேக் மெரைன் ஏஜென்சிஸ் நிறுவனமும், ஸ்டிவிடோராக செயின்ட் ஜான் நிறுவனமும் செயல்பட்டன என்று தூத்துக்குடி துறைமுக சபை தலைவர் கு.ஜெ. ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.