பணவீக்கம் சிறிதளவு அதிகரித்துள்ளது.
மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் ஜனவரி 17 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 5.64 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இது முந்தைய வாரத்தில் 5.60% ஆக இருந்தது.
அதே நேரத்தில் சென்ற வருடம் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 4.45% ஆக இருந்தது.
பணவீக்கம் அதிகரித்தற்கு காரணம் சில உணவு பொருட்கள், விமான பெட்ரோல், ஆல்கஹால் விலை அதிகரித்ததே.
ஜனவரி 17 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாடு முழுவதும் லாரிகள் தொடர்ந்து 8 நாட்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதனால் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை சரக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் கறிவேப்பிலை முதல் பல்வேறு பொருட்களின் விலை, குறிப்பாக உணவு பொருட்களின் விலை அதிகரித்தது. மக்காச் சோளம், அரிசி, சோளம், சர்க்கரை, வெல்லம் ஆகியவைகளின் விலை அதிகரித்தது.
தொழிற்சாலை பயன்பாட்டு பொருட்களில் காஸ்டிக் சோடா, துத்தநாகம், மூட்டைக்கு பயன்படுத்தும் சாக்கு பை ஆகியவைகளின் விலை அதிகரித்தது.
எரிசக்தி பிரிவில் விமான பெட்ரோல் விலை 4%, உலை எண்ணெய் விலை 1% அதிகரித்தது.
அதே நேரத்தில் சிமென்ட், உருக்கு பொருட்களின் விலை சிறிதளவு குறைந்துள்ளது
மத்திய அரசு நேற்று நள்ளிரவு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.2, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.25 குறைத்தது.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, பணவீக்கத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை பற்றி நிதி துறை இணை அமைச்சர் பி.கே.பன்சால் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பணவீக்கமும் இரண்டு வாரங்களுக்கு பிறகு குறையும். பணவீக்கம் 1% வரை குறையும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று கூறினார்.