சென்னை துறைமுகத்திற்கும் கனடா நாட்டில் உள்ள ஹாலிஃபேக்ஸ் துறைமுகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று சென்னையில் கையெழுத்திடப்பட்டது.
கடல்சார் போக்குவரத்து, துறைமுக மேம்பாடு, இரு துறைமுகங்களுக்கும் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு ஆகியவை குறித்த இந்த ஒப்பந்தத்தில் சென்னை துறைமுக கழகத்தின் சார்பாக, துறைமுக பொறுப்பு கழகத்தின் தலைவர் கே சுரேசும், ஹாலிஃபேக்ஸ் துறைமுகத்தின் தலைவர் கரேன் ஒல்டுஃபீல்டும் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஹாலிஃபேக்ஸ் துறைமுகத் தூதர் சைரஸ் கட்கரா, சென்னை துறைமுக பொறுப்புக் கழக உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து சுரேஷ் கூறுகையில், இந்த ஒப்பந்தத்தால், துறைமுக நிர்வாகத்தில் இருதரப்பினரும் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளவும், சரக்கு பெட்டகங்கள் உள்ளிட்ட சிறப்பு முனையங்கள் அமைக்கவும், சுற்றுலா வளர்ச்சிக்கும், இரு துறைமுகங்களுக்கும் இடையே வர்த்தகத்தை மேம்படுத்தவும் வழி வகுக்கும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இருதரப்பினருக்கும் பலனளிக்கும் என்று தெரிவித்தார். இதற்கு முன்பு பெல்ஜியம் நாட்டு துறைமுகமான ஜீப்ருவுடன் இதுபோன்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், தெரிவித்தார்.
ஹாலிஃபேக்ஸ் துறைமுகத்தின் தலைவர் கரேன் பேசுகையில், ஹாலிஃபேக்ஸ் துறைமுகம் சென்னை துறைமுகத்தை போன்றே மிகப் பழமையானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இருதரப்பிற்கும் வர்த்தகத்தையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்த பயன்படும் என்று தெரிவித்தார்.