Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சத்யம் கம்ப்யூட்டர் பிரச்சனை- அந்நிய முதலீடு பாதிப்பில்லை

சத்யம் கம்ப்யூட்டர் பிரச்சனை- அந்நிய முதலீடு பாதிப்பில்லை
டாவோஸ் , புதன், 28 ஜனவரி 2009 (16:13 IST)
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள முறைகேட்டை தொடர்ந்து, இந்தியாவில் கண்காணிப்பு, ஒழுங்குபடுத்தும் அமைப்புக்கள் பலப்படுத்தப்படும்.

அதே நேரத்தில் இந்த ஒரு நிறுவனத்தில் நடைபெற்றுள்ள தவறால், இந்தியாவில் முதலீடு செய்யக்கூடாது என்று அந்நிய நாடுகள் கருதாது என்று மத்திய வர்த்தக-தொழில் துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.

பி.பி.சி ஹார்ட் டாக் நிகழ்ச்சிக்கு பேட்டி அளிக்கையில் கமல்நாத், கடந்த 10 முதல் 12 ஆண்டுகளின் செயல்பாட்டினால், இந்தியா பெரிய அளவு வளர்ந்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு முதலீடு வருகிறது. இந்த ஒரு சம்பவம் முதலீடு வருவதற்கு தடையாக இருக்காது என்று கமல்நாத் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், சத்யம் நிறுவனத்தின் இயக்குநர்களாக நிபுணர்களும், திறமை வாய்ந்தவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் பற்றி புலனாய்வு செய்யப்பட்டு வருகிறது. இதன் முடிவு அடிப்படையில் கண்காணிப்பு-ஒழுங்குபடுத்தும் அமைப்புக்கள் பலப்படுத்தப்படும் என்று கூறினார்.

இதற்கு முன்பிருந்த இயக்குநர் குழுவில் இடம் பெற்று இருந்த இயக்குநர்களும் திறமை வாய்ந்தவர்கள் தானே என்று சுட்டிக் காண்பித்ததற்கு பதிலளிக்கையில், அவர்கள் தணிக்கையாளர்களையே நம்பி இருந்தனர். அவர்கள் நிதி நிர்வாகம் தொடர்பான நடவடிக்கைகளில் முழு அளவு ஈடுபடவில்லை. உலகத்தில் இயக்குநர் குழு, ஒரு நிறுவனத்தின் நிதி நிர்வாகத்தை முழு அளவில் மேற்கொண்டதாக தெரியவில்லை என்று பதிலளித்தார்.

சத்யம் பிரச்சனையால் இந்தியாவில் முதலீடு செய்வது பாதிக்குமா என்ற கேள்விக்கு கமல்நாத் பதிலளிக்கையில், பார்ச்சூன் இதழில் இடம்பெற்றுள்ள 500 நிறுவனங்களில் 60 விழுக்காடு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. இதற்கு காரணம் அவை இந்தியாவின் மீது வைத்துள்ள நம்பிக்கையே என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil