சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கு, வங்கிகள் கொடுத்துள்ள கடனால், அவைகளுக்கு எவ்வித இல்லை. அத்துடன் அந்த குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் வங்கிகள் குறைந்த அளவே கடன் கொடுத்துள்ளன என்று ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ் தெரிவித்தார்.
மும்பையில் நேற்று செய்தியாளர்களிடம் சுப்பாராவ் பேசுகையில், சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம், அதன் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது, இவர்கள் பேரில் வங்கி கணக்குகள் துவக்கியது போன்றவை குறித்து, வாடிக்கையாளர் விபரம் அறியும் முறையில் ரிசர்வ் வங்கி பரிசோதனை செய்யும். பிரைஸ் வாட்டர் ஹவுஸ் ஆடிட்டர் நிறுவனத்தை, கணக்கு தணிக்கை செய்ய தற்காலிகமாக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது குறித்தும் ரிசர்வ் வங்கி மறு பரிசீலனை செய்யும் என்று சுப்பாராவ் கூறினார்.
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கு, வங்கிகள் கொடுத்துள்ள கடன் பற்றிய கேள்விக்கு, சுப்பாராவ் பதிலளிக்கையில், எந்த ஒரு நிறுவனத்திற்கும் கொடுத்துள்ள கடன் பற்றிய விபரத்தையும் ரிசர்வ் வங்கி தெரிவிக்க இயலாது. அதே நேரத்தில் சத்யம் கம்ப்யூட்டர், அந்த குழுமத்தைச் சேர்ந்த நிறுவனமான மாய்டாஸ் போன்றவைகளுக்கு வங்கிகள் குறைந்த அளவே கடன் கொடுத்துள்ளன என்று தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி உதவி கவர்னர் உஷா தொரட் கூறுகையில், இந்த நிறுவனத்திற்கு வங்கிகள் கொடுத்துள்ள கடனில், அதிக அளவு கடனுக்கு, ஈடு உள்ளது. மிக குறைந்த அளவு கடனே, ஈடு இல்லாமல் கொடுக்கப்பட்டுள்ளது. இது அபாயகாரமான அளவு அல்ல என்று தெரிவித்தார்.
சத்யம் கம்ப்யூட்டர் நிறுனத்தின் சேர்மன் ராமலிங்க ராஜு, சத்யம் கம்ப்யூட்டர் கணக்குகளில் ரூ.7 ஆயிரம் கோடி அளவிற்கு தவறாக தாக்கல் செய்யப்பட்டதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து இவரையும், இவரின் தம்பியும், மேலாண்மை இயக்குநருமான ராம ராஜு, தலைமை நிதி அதிகாரி வி.சீனிவாஸ் ஆகியோரை ஆந்திர மாநில சி.பி-சி.ஐ.டி காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை பிரைஸ் வாட்டர் ஹவுஸ் தணிக்கை நிறுவனம் தணிக்கை செய்து, சான்றிதழ் வழங்கியுள்ளது.
பிரைஸ் வாட்டர் ஹவுஸ், குளோபல் டிரஸ்ட் வங்கிற்கும் கணக்கு தணிக்கை செய்து வந்தது. இந்த வங்கி, 2003 ஆம் ஆண்டு முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து குளோபல் டிரஸ்ட் வங்கியின் கணக்குகளை தணிக்கை செய்த பிரைஸ் வாட்டர் ஹவுஸ் தணிக்கை நிறுவனம், எந்த வங்கியின் கணக்குகளையும் தணிக்கை செய்ய கூடாது என்று ரிசர்வ் வங்கி தடை விதித்தது.
2007 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியிடம், பிரைஸ் வாட்டர் ஹவுஸ் தணிக்கை நிறுவனம், நான்கு ஆண்டுகளாக தடை அமலில் உள்ளது. இதனால் அதிக இழப்பு ஏற்படுகிறது. எனவே தடையை நீக்கும் படி விண்ணப்பித்தது.
இதனிடையே சில வங்கிள், பிரைஸ் வாட்டர் ஹவுஸ் நிறுவனத்தை தணிக்கையாளராக நியமிக்க ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கேட்டன. இதற்கு ரிசர்வ் வங்கியும் அனுமதித்தது.
ஆனால் தற்போது இதே நிறுவனம் தணிக்கை செய்யும் சத்யம் கம்ப்யூட்டர் கணக்குகளிலும் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன கணக்கு தணிக்கையாளர்களான எஸ்.கோபாலகிருஷ்ணன், சீனிவாஸ் துல்லூரி ஆகியோரை பிரைஸ் வாட்டர் ஹவுஸ் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.
இவர்கள் இருவரையும் ஏற்கனவே ஆந்திர சிபி-சி.ஐ.டி காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.