Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொருளாதார நெருக்கடி-ரப்பர் தொழில் பாதிப்பு

பொருளாதார நெருக்கடி-ரப்பர் தொழில் பாதிப்பு
கோட்டயம் , செவ்வாய், 27 ஜனவரி 2009 (18:06 IST)
பொருளாதார நெருக்கடியால், வாகன துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ரப்பர் தொழில் துறையும் பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பதாக ரப்பர் வாரியம் கூறியுள்ளது.

இந்தியாவின் ரப்பர் தொழில் துறையில் வருடத்திற்கு ரூ.20,000 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறுகிறது.

உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய வாகன துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரப்பர் தொழில் சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதாக ரப்பர் வாரிய சேர்மன் சாஜன் பீட்டர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தற்போதுள்ள சூழ்நிலையில் இயற்கை ரப்பரின் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இல்லை. தற்போதைய நிலை, இந்த வருட இறுதியில் மாறும் வாய்ப்பு உள்ளது.

ரப்பர் விலையை பொறுத்த மட்டில், அதன் உற்பத்திக்கும் தேவைக்கும் இடையே நெருங்கிய உறவு உள்ளது. இதன் விலை பெட்ரோலிய கச்சா எண்ணெய், பருவநிலை மாற்றம், அந்நிய செலவாணி சந்தையில் ரூபாயின் மதிப்பு, முன்பேர சந்தை விலை ஆகியவைகளைப் பொறுத்து மாறுகிறது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி, வாகன உற்பத்தி துறை உட்பட எல்லா துறைகளையும் பாதித்துள்ளது. இதனால் டயர், ரப்பர் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் ரப்பர் உற்பத்தியிலும், இதனை பயன் படுத்துவதிலும் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

இந்திய தொழிலக கூட்டமைப்பின் ஆய்வின் படி, இந்தியாவில் 6 ஆயிரம் ரப்பர் தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 30 பெரிய அளவு தொழிற்சாலைகள். 300 நடுத்தர பிரிவு, 5,600 சிறு தொழில் பிரிவு தொழிற்சாலைகள்.

இந்தியாவின் அடிப்படையான தொழில் துறைகளில், ரப்பர் தொழில் துறையும் அடங்கும். இதில் வருடத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறுகின்றது. இதனால் அரசுக்கு வரி முலமாக ரூ.4,000 கோடி வருவாய் கிடைக்கின்றது.

ரப்பர் பயன்பாடு சென்ற வருடம் 1.5 விழுக்காடு குறைந்துள்ளது. இந்த ஆண்டு மேலும் 0.83 விழுக்காடு குறையும் என்று சர்வதேச ரப்பர் ஆய்வு மையம் கணித்துள்ளது. அதே நேரத்தில் 2010 ஆம் ஆண்டு ரப்பர் பயன்பாடு 5.54 விழுக்காடு அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. இது ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருக்கின்றது என்று சாஜன் பீட்டர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil