Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெற் பயிரில் இலைச் சுருட்டுப் புழு தாக்குதல்

நெற் பயிரில் இலைச் சுருட்டுப் புழு தாக்குதல்
சாத்தூர் , செவ்வாய், 27 ஜனவரி 2009 (15:40 IST)
சாத்தூர் பகுதியில் இலைச் சுருட்டுப் புழுக்கள் தாக்கியதில் ஆயிரம் ஹெக்டேரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இங்கு இருக்கன்குடி, பெரியகொல்லப்பட்டி, நத்தத்துப்பட்டி, சிறுகுளம், கோல்வார்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் அதிக விளைச்சல் கொடுக்கும் தன்மை உள்ளவை. இவற்றில் இலைச் சுருட்டுப் புழுத் தாக்குதலை எதிர்க்கும் திறன் இல்லாததால் நெற்பயிரில் அதிக அளவில், இந்த புழுத் தாக்குதல் காணப்படுகிறது.

இப் புழுவின் தாக்குதல் உள்ள வயல்களில் 10 மி.மீ. நீளமுள்ள இறக்கைகளின் ஓரங்களில் பழுப்பு அல்லது சாம்பல் நிறப் பட்டை காணப்படும். தாய் அந்துப் பூச்சிகள் பறப்பதைக் காணலாம்.

இப் பூச்சி இடும் முட்டையிலிருந்து வரும் புழு முதலில் இலைகளை நீளவாக்கில் சுருட்டியோ அல்லது இலையின் நுனியையும் அடிப்பாகத்தையும் மடக்கியோ மெல்லிய இலைகளால் பின்னி உள்ளிருந்து கொண்டு பச்சையத்தை சுரண்டித் தின்கிறது.

புழுக்கள் தாக்கிய இலைகள் வெளுத்துக் காணப்படும். பின்பு காய்ந்து விடும். பயிர் வளர்ச்சிப் பருவத்தில் இலைகளை சுரண்டி சாப்பிடுவதால் அதிக சேதம் ஏற்படுகிறது.

கதிர் வெளிவரும் தருணத்தில் தாக்குதல் ஏற்பட்டால் நெல் மணிகள் முற்றுவது பாதிக்கப்படும்.

இது குறித்து சாத்தூர் வேளாண் உதவி இயக்குநர் மூ. பழனிச்செல்வம் கூறுகையில், நெல் உற்பத்தியைப் அதிகப்படுத்தும் நோக்கத்தில் அதிக அளவு தூர் கட்டுவதற்கு அதிக நைட்ரஜன் உரம் இடப்படுகிறது. அதிக தூர் கட்டி இலைகளும் பச்சை பசேலென்று காணப்படுவதால் இப் பூச்சியின் பெருக்கம் அதிகமாகிறது.

எல்லாப் பூச்சிகளையும் கொல்லும் தன்மையுடைய பூச்சிக் கொல்லி மருந்துகளை தேவைக்கு அதிகமாக பயன்படுத்தினாலும் இப் பூச்சியின் தாக்குதல் அதிகமாக ஏற்படக் கூடும்.

தூர்கட்டும் பருவத்தில் போரேட் 10 விழுக்காடு குருணை இட்டால் இலை சுருட்டுப் புழுத் தாக்குதல் அதிகமாகும். இப் புழுவைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு பாசலோன் 600 மி.லி., குவின்பால் 400 மி.லி., கார்பாரில் நனையும் தூள் 1 கிலோ, பெனிட்ரோதியின் 500 மி.லி., குளோரினாரிபாஸ் 500 மி.லி., மானோகுரோட்டோபாஸ் 300 மி.லி. ஆகியவற்றில் ஏதாவது ஒரு மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து இலைகளில் படும்படி தெளிக்க வேண்டும்.

குருணை மருந்தை உபயோகிக்கக் கூடாது. தழைச்சத்து உரத்தை போடாமல் இருக்க வேண்டும். இடும் உரத்தை வேப்பம் புண்ணாக்கு கலந்து இரண்டு அல்லது மூன்று தடவை விரித்து இடலாம் என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil