முட்டையை ஏற்றுமதி செய்யும் போது கடனுக்கு வழங்க வேண்டாம் என நாமக்கல் மண்டல கோழிப் பண்ணையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) தலைவர் டாக்டர் பி.செல்வராஜ் விடுத்துள்ள அறிக்கையில், நாமக்கல் மண்டலத்தில் இருந்து ஏற்றுமதிக்காக முட்டைகளை வழங்கிய பண்ணையாளர்களுக்கு வரவேண்டிய நிலுவை தொகை ரூ.5 கோடிக்கும் அதிகமாக உள்ளது.
ஏற்றுமதிக்காக முட்டைகளை வழங்கும் பண்ணையாளர்கள் மிகுந்த கவனத்துடன் வழங்க வேண்டும். தமிழகம் மற்றும் கேரளத்தில் ஐயப்பன் சீசன் முடிந்துள்ளதாலும், பொங்கல் பண்டிகை முடிந்துள்ளதாலும் முட்டை விற்பனை ஓரளவு அதிகரித்துள்ளது. முட்டைக்கான தேவையும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் இருந்து இரு மாநிலங்களுக்கும் முட்டைகள் அனுப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களுக்கும் முட்டைகள் அனுப்பப்படுகின்றன. இதனால், முட்டை விலையும் உயர்ந்து வருகிறது.
ஆப்கானிஸ்தான், ஈரான், துர்கிஸ்தான், கஜகஸ்தான், தென் ஆப்பிரிக்கா,அங்கோலா, லைபீரியா ஆகிய நாடுகளுக்கு முட்டைகள் தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 1544.49 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் உயரும். இதனால், ஏற்றுமதி முட்டைகளை கடனுக்கு வழங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.