இந்தியாவில் 26 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். இவர்களில் 70 விழுக்காட்டினர் விவசாயிகள் என்று தமிழ்நாடு சி.ஐ.ஐ. (கான்பெடரேஷன் ஆஃப் இந்தியன் இண்டஸ்டரி) தலைவர் மாணிக்கம் ராமசாமி கூறினார்.
சேலம் நகரத்தார் சங்கம் சார்பில் 43 ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் மாணிக்கம் ராமசாமி பேசுகையில், நாட்டில் உள்ளடக்கிய வளர்ச்சி சரியாக இல்லாவிட்டால் வன்முறை நடக்கும்.
நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது வறுமைக்கோட்டுக் கீழ் 70% பேர் இருந்தனர். இது தற்போது 26% ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் இதில் 70% பேர் விவசாயிகள் என்பது வேதனைக்குரியது.
கடந்த பத்தாண்டுகளுக்கு முன் எத்தியோப்பியாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. தற்போது உலக வங்கியும், யுனெஸ்கோவும் மேற்கொண்ட ஆய்வில் அந்நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் வேகமாக குறைந்து வருகின்றனர்.
ஆனால் இந்தியாவில் இந்த வளர்ச்சி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் ஒரு பக்கம் ஆடம்பரமும், மற்றொரு பக்கம் வறுமையும் நிறைந்துள்ளது. இதன் காரணமாக 165 மாவட்டங்களில் நக்ஸ்லைட்கள் உள்ளனர்.
மக்காச்சோளத்தை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் கூடுதலாக லாபம் கிடைக்கும். ஆனால், கோழித் தீவனத்தின் விலை உயர்ந்து விடும் என்பதால் மக்காச்சோள ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அரிசியை ஏற்றுமதி செய்தால் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் கூடுதலாக லாபம் கிடைக்கும். ஆனால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்று ரூ.2 ஆயிரத்துக்கு சலுகை வழங்கிவிட்டு ரூ.20 ஆயிரத்தை அரசு பறிக்கிறது. இதனால் விவசாயிகள் வறுமைக் கோட்டுக்கு கீழேயே உள்ளனர்.
ஏற்றுமதியில் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் லாபம், தடை செய்வதால் பறிக்கப்படுகிறது. விவசாயிகள் முன்னேற்றத்துக்கென தனி கொள்கை வகுக்க வேண்டும் என்று கூறினார்.