வீட்டு விழாக்களின் போது வணிக சமையல் எரிவாயுக்களை ரூ.1,500 வைப்புத்தொகையை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்றும் சமையல் எரிவாயுவை திருப்பித் தரும்போது வைப்புத்தொகை திருப்பித் தரப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு கூட்டம், இந்தக் குழுவின் தலைவரும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையருமான ராஜாராமன் தலைமையில் நடத்தப்பட்டது.
நுகர்வோரின் புகார்கள் பற்றி இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. வீட்டு விழாக்களின் போது வணிக சமையல் எரிவாயுக்களை ரூ.1,500 வைப்புத்தொகையை செலுத்தி வாங்கலாம். சமையல் எரிவாயுவை திருப்பித் தரும்போது வைப்புத்தொகை திருப்பித் தரப்படும்.
கலப்பட தேயிலைத் தூள் பயன்படுத்துகிறவர்கள் மீது மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து கல்லூரிகளிலும் நுகர்வோர் மன்றங்கள் தொடங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.