Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீன பொம்மைகளுக்கு தடை

சீன பொம்மைகளுக்கு தடை
புது டெல்லி , செவ்வாய், 27 ஜனவரி 2009 (11:55 IST)
சீனாவில் இருந்து பொம்மைகளை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

சீனாவில் இருந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடும் பொம்மைகள் அதிக அளவு இறக்குமதி செய்யப்படுகின்றன. குழந்தைகளை கவரும் விதவிதமான பொம்மைகள், பேட்டரியில் இயங்கும் கார், ஹெலிகாப்டர் போன்ற பொம்மைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றின் விலை மிக குறைவாக இருப்பதால், அதிக அளவு விற்பனையாகிறது.

இதனால் உள்நாட்டு பொம்மை தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை குறைந்தது. உள்நாட்டு பொம்மை தயாரிப்பு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இதை தடுத்து நிறுத்த சீனாவில் இருந்து பொம்மை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உள்நாட்டு பொம்மை தயாரிப்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில் அயல்நாட்டு வர்த்தக இயக்குநரகம், நேற்று சீனாவில் இருந்து பொம்மை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவு ஆறு மாதங்கள் அமலில் இருக்கும்.

இந்த உத்தரவில் தடை விதிப்பதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால் உள்நாட்டு பொம்மை தயாரிப்பு நிறுவனங்களை பாதுகாக்கவே தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த தடை உத்தரவின் படி, சக்கரம் உள்ள பொம்மைகள், பொம்மை துப்பாக்கி, மரம், உலோகங்களால் செய்த பொம்மைகள், இசை கருவிகள், பேட்டரியில் ஓடும் ரயில் உட்பட விளையாட்டு பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை குறித்து இந்திய பொம்மை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராஜ் குமார் கருத்து தெரிவிக்கையில், சீனாவில் இருந்து மலிவான விலையில் இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளுக்கு வர்த்தக அமைச்சகம் தடை விதிக்க எடுத்துள்ள முடிவு ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. இந்த தடையை வரவேற்கின்றோம். இது உள்நாட்டு தொழிலுக்கு நல்லது என்று கூறினார்.

இதே வர்த்தகத்தில் உள்ள நிபுணர் அருன் கோயல் கருத்து தெரிவிக்கையில், இந்த தடையால் சீனாவில் இருந்து நேபாளம் வழியாக பொம்மைகளை கடுத்துவதை ஊக்கவிக்கும். இந்த தடை உத்தரவு மிக மோசமானது. குறிப்பாக வருவாய் குறைவாக உள்ள குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் மலிவான விலையில் கிடைக்கும் பொம்மைகளையே வாங்க இயலும் என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil