இந்த நிதி ஆண்டில், டிசம்பர் மாதம் வரை முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் இந்தியன் வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ.623.68 கோடியாக உள்ளது என்று இந்தியன் வங்கியின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான எம் எஸ் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.
இந்தியன் வங்கியின் டிசம்பர் 31, 2008 உடன் முடிவடைந்த காலாண்டு நிதிநிலை அறிக்கையை, இந்த வங்கியின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான எம் எஸ் சுந்தர்ராஜன் வெளியிட்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.350.70 கோடியாக அதிகரித்துள்ளது. (இது சென்ற ஆண்டு ரூ.307.50 கோடி) வட்டி வருவாய் 28.25% அதிகரித்து ரூ.1784.03 கோடியை எட்டியுள்ளது. இதற்கு காரணம் வங்கி கடன் வழங்குவதில் முன்னோடியாக இருப்பதே என்று தெரிவித்தார்.
அதே போல வங்கியின் மொத்த வருவாய் ரூ.1676 கோடியிலிருந்து ரூ.2071.37 கோடியாக அதிகரித்துள்ளது. இது 23.59 விழுக்காடு வளர்ச்சியாகும்.
இதன் ஒரு பங்கின் மதிப்பு ரூ.125.57 ஆக உயர்ந்துள்ளது. (டிசம்பர் 07 இல் 92.80 ஆக இருந்தது)
இதன் நிகர மதிப்பு ரூ.4388.44 கோடியிலிருந்து ரூ.5796.52 கோடியாக அதிகரித்துள்ளது. ஒரு பங்கின் ஈட்டுத்திறன் ரூ.27.75 இல்
இருந்து ரூ.31.69 ஆக அதிகரித்துள்ளது. மூலதன தேவை விகிதம், 31.12.2008 நிலவரப்படி 12.68% உள்ளது. (31.12.2007 இல் 13.51% இருந்தது).
வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.90,015 கோடியிலிருந்து ரூ.1,20,120 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த டெபாசிட்டுகள் 30.65% சதவீதம் அதிகரித்து ரூ.69,660 கோடியாக உள்ளது. மொத்த கடன்கள் 37.50% அதிகரித்து ரூ.50,460 கோடியாக உள்ளது.
இந்தியன் வங்கி கடன்களின் தரத்தை உயர்த்துவதில் வங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 31.12.2008 நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக் கடன்கள் 0.92% (ரூ.462.46 கோடி) குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1.39% (ரூ.510.46 கோடி) இருந்தது. வங்கியின் நிகர வாராக் கடன்கள் ரூ.80.29 கோடியாக குறைந்து, வங்கியின் நிகரக் கடன்களில் 0.16% உள்ளது.
கடந்த 9 மாதங்களில் ரூ.326.09 கோடியளவிற்கு வாராக் கடன்கள் வசூலிக்கப்பட்டுள்ளன. கடன்கள் பெரிய அளவில் அதிகரித்த பொழுதும், தொடர்ந்து நல்ல முறையில் கண்காணிக்கப்படுவதால் கடந்த 9 மாதங்களில் வாராக் கடன்களின் அதிகரிப்பு ரூ.191.58 கோடி அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டின் 9 மாதங்களில் வங்கியின் முன்னுரிமைத் துறைக்கான கடன்கள் ரூ.2,569.11 கோடி அளவிற்கு (16.98%) அதிகரித்துள்ளது. 31.12.2008 அன்று நிலவரப்படி வங்கியின் முன்னுரிமைத்
துறைக்கான கடன்கள் ரூ.17,698.34 கோடியை எட்டியுள்ளது.
விவசாயத் துறைக்கான கடன்கள் மட்டும் ரூ.1032.30 கோடி அளவிற்கு, கடந்த 9 மாதத்தில் அதிகரித்துள்ளது. இது 16.40% வளர்ச்சியாகும். 31.12.2008 நிலவரப்படி வங்கியின் விவசாயத் துறைக்கான கடன்கள் ரூ.7326 கோடியாக இருந்தது.
விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரண திட்டம்-2008 படி, ரூ.457.40 கோடியளவிற்கு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் 2.36 லட்சம் சிறிய மற்றும் மிகச் சிறிய விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
இது தவிர 43 ஆயிரம் விவசாயிகள் ரூ.84.57 கோடியளவிற்கு நிவாரணம் பெற்றுள்ளனர். மேலும், இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த 67,947 விவசாயிகளுக்கு ரூ.198.81 கோடியளவிற்கு புதுக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியன் வங்கி, கிராமப்புற முன்னேற்றத்திற்கான அறக்கட்டளை (ஐபிடிஆர்) ஒன்றை நிறுவியுள்ளது. இந்த அறக்கட்டைளை கிராமப்புறங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நடத்தி வருகிறது. இந்த அறக்கட்டளை மூலமாக கடன் விழிப்புணர்வு மற்றும் கடன் ஆலோசனை மையம் ஒன்று தர்மபுரியில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் புதுச்சேரியிலும் இத்தகைய மையம் ஒன்று தொடங்கப்படும்.
அனைவருக்கும் வங்கிச் சேவை திட்டத்தின் கீழ் 4637 கிராமங்களில் 15.15 லட்சம் குறைந்தபட்ச இருப்பு ஏதும் இல்லாத சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் இத்திட்டத்தின் கீழ் 52,524 பேருக்கு ரூ.10.90 கோடி அளவிற்கு ஓவர்டிராப்ட் மற்றும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில், இந்தியன் வங்கி ரூ.816.02 கோடியளவிற்கு 62,457 சுயஉதவிக் குழுக்களுக்கு
நுண்கடன்கள் வழங்கியுள்ளது.
கடந்த 9 மாதங்களில் 49.399 மாணவர்களுக்கு ரூ.426.68 கோடியளவிற்கு கல்விக் கடன்களை வழங்கப்பட்டுள்ளன. 31.12.2008 நிலவரப்படி வங்கியின் மொத்தக் கல்வி கடன் ரூ.1,592.01 கோடியாக உள்ளது. இதனால் 1,27,004 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.
கடந்த 9 மாதங்களில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு இந்தியன் வங்கி ரூ.929 கோடியளவிற்கு கடன்கள் வழங்கியுள்ளது. 31.12.2008 நிலவரப்படி வங்கியின் தனிநபர் மற்றும் வீட்டுக்கடன்கள் முறையே ரூ.9,200.67 கோடி மற்றும் ரூ.4,707.04 கோடியாக இருந்தது. கடந்த 9 மாதத்தில் மட்டும் ரூ.1006.47 கோடியளவிற்கு வீட்டுக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகளை அதிகரிப்பதற்காக வங்கி சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 26 ஆம் தேதி வரை, 101 நாட்களில் “பனியன் விரிக்ச் னும் இயக்கத்தை நடத்தியது. இதன் மூலம் 10 லட்சம் புதிய கணக்குகள் துவங்கப்பட்டன.
இந்த ஆண்டு கடந்த 9 மாதங்களில் மட்டும் 41 புதுக்கிளைகள் துவங்கப்பட்டன. இந்த காலாண்டில் மேலும் பல புதிய கிளைகள் துவக்கப்படும். நடப்பு நிதியாண்டில் 100 கிளைகள் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் ஒரு தனிப்பட்ட கார்ப்பரேட் கிளை ஒன்று துவக்கப்பட்டுள்ளது. இது பெரிய வர்த்தக நிறுவனங்களின் தேவையை பூர்த்தி செய்யும். விரைவில் பெங்களூர், சென்னை, ஐதராபாத் போன்ற நகரங்களில் மேலும் 3 கார்ப்பரேட் கிளைகள் துவங்கப்படும்.
31.12.2008 வரை வங்கி 651 ஏ.டி.எம்-களை நிறுவியுள்ளது. இது தவிர, மற்ற வங்கிகளோடு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தால், இந்தியன் வங்கியின் வாடிக்கையாளர்கள் நாடெங்கிலும் உள்ள 3200 ஏடிஎம்களில் பணம் பெறலாம். 35 ரயில்வே நிலையங்களில் ஏடிஎம்கள் நிறுவப்பட்டுள்ளன. சென்னையில் பயோமெட்ரிக் ஸ்கேனர் இணைக்கப்பட்ட ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது.