கடந்த பத்து வாரங்களாக குறைந்து வந்த பணவீக்கம், மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.
ஜனவரி 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 5.60% ஆக அதிகரித்துள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 5.24% ஆக இருந்தது.
தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளதற்கு முக்கிய காரணம் காய்கறி விலை 18%, பதப்படுத்தப்பட்ட மீன் விலை 40% அதிகரித்ததே.
இந்த வாரத்தில் பணவீக்கம் அதிகரித்தற்கு முக்கிய காரணம், வாகனங்களின் வேலை நிறுத்தமே என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.
தற்போது பணவீக்கத்தை கணக்கிட்டுள்ள வாரத்தில் மொத்த விலை அட்டவணையில் காய்கறிகள் விலை 18.4%, பதப்படுத்தப்பட்ட மீன் வகைகள் விலை 42.8% அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் கடல் மீன், காகிதங்கள், ரப்பர் பொருட்கள், இரசாயண பொருட்களின் விலை குறைந்துள்ளது.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சுமித்ரா சவுத்ரி கூறுகையில், இந்த நிதி ஆண்டு முடிவிற்குள் பணவீக்கம் மூன்று முதல் 4 விழுக்காடாக குறையும் என்று தெரிவித்தார்.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் போது, விலை மீண்டும் குறைந்து, பணவீக்கம் குறைய வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
கிரிசல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த முதன்மை பொருளாதார ஆய்வாளர் டி.கே.ஷோஷி கூறுகையில், பணவீக்கம் அதிகரித்து இருப்பதற்கு முக்கிய காரணம் லாரி, டிரக் போன்ற வாகனங்களின் வேலை நிறுத்தமே. இது தற்காலிகமானது தான். இனி வரும் காலத்தில் பொருட்களின் விலைகள் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. வருகின்ற ஜுன்-ஜுலை மாதங்களில் டிபிலேசன் (deflation - பணவீக்கத்திற்கு எதிரானது) ஏற்பட வாய்ப்பு உண்டு. மத்திய அரசு பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைத்தால், ஏப்ரல்-மே மாதங்களிலேயே டிபிலேசன் ஏற்பட வாய்ப்பு உண்டு. ரிசர்வ் வங்கி மீண்டும் ரிபோ விகிதத்தையும், ரிவர்ஸ் ரிபோ விகிதத்தை அரை முதல் 1 விழுக்காடு வரை குறைக்கும் என்று எதிர்பார்க்கின்றேன் என்று தெரிவித்தார்.