உலகளாவிய பொருளாதார நெருக்கடி நம்மைப் பாதித்தாலும், நமது நாட்டின் பொருளாதார அளவுகோல்கள் சிறப்பாகவே உள்ளன என்றும், இந்த நிதியாண்டில் அரசு வங்கிகள் 60,000 பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும் என்றும் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் நேற்று நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் சிதம்பரம், நமது நாட்டின் விவசாயிகள் உணவு உற்பத்தியை பெருக்கி வருகின்றனர், பொதுத் துறை வங்கிகள் பெரும் அளவிற்கு பணி வாய்ப்பை அளிக்கப் போகின்றன, உண்மையைக் கூறுவதென்றால், இந்த ஆண்டும் மட்டும் நமது நாட்டின் பொதுத் துறை வங்கிகள் 60,000 பேருக்கு வேலை அளிக்கப் போகின்றன என்று கூறினார்.
சத்யம் நிறுவனத்தில் நடந்த மோசடி எந்த விதத்திலும் நமது நாட்டின் தனியார் நிறுவனங்களின் மதிப்பைக் குறைத்து விடாது என்று கூறிய சிதம்பரம், சத்யம் வழக்கு என்பது அந்நிறுவனத்தில் நடந்த ஒரு மோசடியே தவிர, அதன் வீழ்ச்சியல்ல என்றும், அதனை உரிய நேரத்தில் அதன் நிர்வாக அமைப்போ அல்லது பட்டயக் கணக்காளர்களோ அல்லது கட்டுப்பாட்டாளர்களோ கண்டுபிடிக்கவில்லை என்று கூறினார்.
மோசடி எங்கு வேண்டுமானாலும் நடைபெறலாம். அமெரிக்காவின் லீமேன் பிரதர்ஸ், பியர் ஸ்டீன்ஸ் போன்ற நிறுவனங்கள் போல இந்தியாவின் வங்கிகளோ அல்லது வங்கிள் அல்லாத நிதி நிறுவனங்களோ திவாலாகவில்லை என்று சிதம்பரம் கூறினார்.