மும்பை: சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் சில ஆவணங்கள் போலியானவையாக உள்ளன என்று தீபக் பரேக் தெரிவித்தார்.
நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள சத்யம் கம்ப்யூட்டரின் நிர்வாகத்தை மேற்பார்வையிடவும், இந்த நெருக்கடிக்கு தீர்வு காணவும் மத்திய அரசு ஆறு இயக்குநர்களை நியமித்துள்ளது.
இந்த இயக்குநர்களில் ஒருவரும், ஹெச்.டி.எப்.சி சேர்மனுமான தீபக் பரேக் இன்று இந்திய தொழிலக கூட்டமைப்பு நடத்திய பெரிய நிறுவனங்களின் நிர்வாகம் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், சத்யம் நிறுவனத்தின் ஆவணங்களை மேலோட்டமாக பார்க்கும் போதே, இவை போலியானவை என்று மிக சுலபமாக தெரிகிறது. புதிய இயக்குநர்களும் பங்குபெறும், இயக்குநர்களின் கூட்டம் ஹைதராபாத்தில் ஜனவரி 22-23 ஆம் (நாளை) நடைபெறுகிறது. இதில் புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமிப்பது உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஆராயப்படும். இந்த பதவிக்காக 40 க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று கூறினார்.
இதன் இயக்குநர்கள் ஆறு பேரில், யார் சேர்மனாக நியமிக்கப்படுவார்கள் என்று கேட்டதற்கு, எங்களை இயக்குநர்களாக நியமித்து கம்பெனி சட்ட வாரியம் (கம்பெனி லா போர்ட்-Company Law Board) கொடுத்துள்ள கடிதத்தில், மத்திய அரசு சேர்மனை நியமிக்கும் என்று தெளிவாக கூறியுள்ளது. அதுவரை இயக்குநர்கள் குழு கூட்டத்திற்கு, ஆறு பேரில் ஒருவர் வரிசையாக தலைமை வகிப்போம். இயக்குநர் குழுவில் எடுக்கப்படும் கூட்டாக முடிவெடுப்போம் என்று தீபக் பரேக் கூறினார்.
பங்குச் சந்தையை கண்காணிக்கும் செபி (SEBI), நிறுவனத்தை தொடங்கியவர்கள், அதில் தங்களுக்கு சொந்தமான பங்குகளின் எண்ணிக்கை விபரம், இதை அடமானவைத்து கடன் வாங்கிய விபரம், வாங்கி-விற்பனை செய்த விபரம் போன்றவைகளை, அதன் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் என்று நிபந்தனை கொண்டுவருதை வரவேற்பதாக கூறிய தீபக் பரேக், சத்யம் நிறுவனத்தின் கணக்குகளில் முறைகேடு ரூ.7,136 கோடியா அல்லது ரூ.8,800 கோடியா என்று கேட்டதற்கு, எங்களுக்கு தெரியாது என்று பதிலளித்தார்.
அவர் மேலும் பேசுகையில், கடந்த பதினைந்து நாட்களாக நடந்துள்ள சம்பவம், இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்களின் நம்பகத்தன்மை மீது, சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. இது இந்திய நிறுவனங்களின் வரலாற்றில் ஒரு கருப்பு நாளாகும். சத்யம் நிறுவனம் குறைந்தபட்ச நிர்வாக நியதிகளை கூட மீறியுள்ளது என்று கூறினார்.
நிறுவனங்களை தொடங்குபவர்களின், மற்ற இடங்களில் முதலீடு செய்ய, அதில் அவர்களுக்கு சொந்தமான பங்குகளை அடகு வைத்து பணம் பெறுகின்றனர். அந்த நிறுவனத்தில் இவர்களின் வசம் உள்ள பங்குகளின் எண்ணிக்கை குறைந்தாலும் கூட, அதன் நிர்வாக கட்டுப்பாடுகளை இழக்க தயாராக இல்லை.
இந்த மாதிரியான நடைமுறை இந்தியாவில் மட்டுமே உள்ளது. இதை தொடங்கியவர்கள், மொத்த பங்கு எண்ணிக்கையில், சிறு பான்மை பங்குகளை கொண்டிருந்தாலும், அவரே சேர்மனாக நீடிக்கின்றார். தனது கட்டுப்பாட்டை இழக்க தயாராக இல்லை என்று கூறினார்.