சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தை வாங்குவதில் எல் அண்ட் டி, எஸ்ஸார் நிறுவனங்களிடையே போட்டி எழுந்துள்ளது.
ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் கணக்குகளில் சுமார் ரூ.7 ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது. இதன் சேர்மனாக இருந்த ராமலிங்க ராஜு, கடந்த பல வருடங்காளாக கணக்குகளின் வருவாய், இலாபம் ஆகியவற்றை செயற்கையாக அதிகரித்து காண்பித்ததாக தன்முனைப்பாகவே அறிவித்தார்.
இதனை தொடர்ந்து ஆந்திர மாநில சிபி-சி.ஐ.டி பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தற்போது சேர்மன் ராமலிங்க ராஜு, அவரது தம்பியும் மேலாண்மை இயக்குநருமான ராம ராஜு, தலைமை நிதி அதிகாரி சீனிவாஸ் ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இத்துடன் பங்குச் சந்தையை கண்காணிக்கும் அமைப்பான செபி, நிறுவன பதிவு இயக்குநரகம், மத்திய நிறுவன விவகார அமைச்சகத்தின் தீவிர மோசடி பிரிவு ஆகியவையும் விசாரணை நடத்தி வருகின்றன.
சத்யம் கம்யூட்டர் நிர்வாக பணிகள் தொடர்ந்து எவ்வித சிக்கலும் இல்லாமல் நடைபெற மத்திய அரசு மொத்தம் ஆறு இயக்குநர்களை நியமித்துள்ளது.
இந்நிலையில் பிரச்சனைக்குள்ளான சத்யம் கம்ப்யூட்டரை வாங்குவதற்கு எல் அண்ட் டி, எஸ்ஸார் குழுமங்களுக்கு இடையே போட்டி எழுந்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு கட்டுமான பணிகள், பொறியியல் போன்றவைகளில் சர்வதேச அளவில் முக்கிய நிறுவனமான எல் அண்ட் டி (லார்சன் அண்ட் டூப்ரோ) மென்பொருள் வடிவமைப்பையும் மேற்கொண்டுள்ளது. இதன் துணை நிறுவனமான எல் அண்ட் டி இன்போடெக், மென்பொருள் வடிவமைப்பு, இதர தகவல் தொழில் நுட்ப துறை சார்ந்த பணிகளை செய்து வருகிறது.
இது தொடர்பாக எல்.அண்ட் டி நிறுவனத்தின் சேர்மன் ஏ.எம்.நாயக், நேற்று மத்திய நிறுவன விவகார துறை அமைச்சர் பிரேம் சந்த் குப்தா, செயலாளர் அனுராக் கோயல் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சத்யம் கம்ப்யூட்டரின் பங்குளை, எல் அண்ட் டி சமீபத்தில் அதிக அளவு வாங்கியது. தற்போது மொத்த பங்குகளில், எல் அண்டி வசம் சுமார் 5 விழுக்காடு பங்குகள் உள்ளன.
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தை வாங்க போட்டு போடும் மற்றொரு நிறுவனமான ரூயாவின் எஸ்ஸார் குழுமத்தைச் சேர்ந்த ஏஜிஸ் நிறுவனம் ஏற்கனவே அயல் அலுவலக பணிகளை (BPO-பி.பி.ஓ) செய்து வருகிறது. சத்யம் குழுமத்தின் அயல் அலுவலக பணிகளை மேற்கொள்ளும் பிரிவை வாங்க, எஸ்ஸார் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
இதை உறுதிபடுத்தும் விதமாக சத்யம் கம்யூட்டர் இயக்குநர் தருன் தாஸ் கூறுகையில், சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தை வாங்க அயல் நாடுகளைச் சேர்ந்த தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும், இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் விருப்பம் தெரிவித்துள்ளன என்று தெரிவித்தார்.