கடிகாரங்கள் மற்றும் ஆபரணங்கள் தயாரிப்புத் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனமான டைட்டன், இந்த நிதியாண்டில் தனது ஒட்டுமொத்த வர்த்தக விற்றுமுதல் ரூ.4,000 கோடியைத் தாண்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது.
கடந்த 2006-07இல் டைட்டன் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்றுமுதல் ரூ.3,100 கோடியைத் தொட்டுச் சாதனை படைத்தது என்றும், இதில் லாபம் மட்டும் ரூ.750 கோடி என்றும், உடுப்பியில் டைட்டன் நிறுவனத்தின் 254ஆவது கிளையைத் திறந்து வைத்த அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாஸ்கர் பட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிதியாண்டில் டைட்டன் நிறுவனத்தின் மூன்று பிரிவுகளான கடிகாரங்கள், ஆபரணங்கள், கண் உபகரணங்கள் ஆகிய மூன்றின் ஒட்டுமொத்த விற்றுமுதல், லாபம் ஆகிய இரண்டுமே 30 விழுக்காடு வரை அதிகரிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.