Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சத்யம் கம்ப்யூ- ஆடிட்டர் கைது

சத்யம் கம்ப்யூ- ஆடிட்டர் கைது
ஹைதராபாத்: , செவ்வாய், 13 ஜனவரி 2009 (16:28 IST)
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் கணக்கு முறைகேடு தொடர்பாக, ஆந்திர மாநில சி.பி-சி.ஐ.டி காவல்துறையினர் இன்று கணக்கு தணிக்கையாளரை கைது செய்தனர்.

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக கணக்குகளில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதன் கணக்குகளில் வருவாய், இலாபம் போன்றவைகளை உண்மைக்கு புறம்பாக அதிகரித்து காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை அந்நிறுவனத்தின் சேர்மன் ராமலிங்க ராஜுவே சென்ற வாரம் பகிரங்கமாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சேர்மன் ராமலிங்க ராஜு, அவரின் தம்பியும் மேலாண்மை இயக்குநருமான ராம ராஜு, தலைமை நிதி அதிகாரி வி. சீனிவாஸ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் செபி, கம்பெனி லா போர்ட், கம்பெனி பதிவு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஆந்திர மாநில சி.பி-சி.ஐ.டி காவல் பிரிவைச் சேர்ந்த காவலர்கள், சத்யம் கம்ப்யூட்டர் நிறுனத்தின் கணக்கு தணிக்கை நிறுவனமான ( ஆடிட்டர் அலுவலகம்) பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர் (Price Waterhouse Coopers) அலுவலகத்தில் சோதனை நடத்தினார்கள். அத்துடன் மதாபூரில் உள்ள சத்யம் இன்போசிட்டி அலுவலகங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.

பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர் நிறுவனத்தை சேர்ந்த தணிக்கையாளர் ராமகிருஷ்ணா என்பவரை கைது செய்தனர்.

இந்த நிறுவனத்தில் நடந்த கணக்கு முறைகேடுகளில் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர் நிறுவன தணிக்கையாளர்களுக்கும், தலைமை நிதி அதிகாரியாக இருந்த வி.சீனிவாசனுக்கும் தொடர்பு இருப்பதாக காவல் துறை கருதுகிறது.

இந்த வழக்கை விசாரணை செய்து வரும் காவல்துறையினரிடம், சீனிவாசன் இந்த முறைகேட்டில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும், ராமலிங்க ராஜு, ராம ராஜு ஆகியோர் கூறியதையே, தான் செய்ததாகவும் தெரிவித்து உள்ளார்.

தலைமை கணக்கு அதிகாரி சீனிவாசன் வீட்டில் நடந்த சோதனையில், அவரும், அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், ஹைதராபாத் நகர்ப்புறத்தில் 70 ஏக்கருக்கும் அதிகமான நிலம் இருப்பதற்கான ஆவணங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இத்துடன் காவல் துறையினர் லேப்டாப் பறிமுதல் செய்துள்ளனர். இதில் கடந்த ஏழு ஆண்டுகளாக கணக்கில் நடந்த முறைகேடு பற்றிய தகவல் இருக்கும் என்று கருதுகின்றனர்.

இத்துடன் வங்கி வைப்பு நிதி ரசீது, வங்கி கணக்கு புத்தகம், கடன் அட்டை, பங்கு பத்திரங்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்த ஆவணங்கள் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

மத்திய அரசு நியமித்துள்ள இயக்குநர்கள் கிரன் கார்னிக், தீபக் எஸ்.பாரக், சி.அச்சுதன், நேற்று சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பல்வேறு அதிகாரிகளுடன் சுமார் ஏழு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil