மத்திய அரசு கரூரில் இயங்கும் கைத்தறி நெசவாலைகளுக்கு சலுகை வழங்கி, இந்த தொழில் நசிவடையாமல் காக்க வேண்டும் என்று கரூர் ஜவுளி உற்பத்தியாளர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கரூரிலும் அதனை சுற்றியுள்ள இடங்களில் படுக்கை விரிப்பு, மேஜை விரிப்பு, திரைச் சீலை, தரை விரிப்பு, துண்டு போன்றவைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவதுடன், அந்நிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தற்போது பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால். பல லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ஜவுளி துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் அமைப்பு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், பல லட்சக்கானோருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ஜவுளி துறை நசிவு அடையாமல் இருக்கவே போரட வேண்டியதுள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையை வைத்து பார்க்கும் போது, அடுத்த வருடமும் இதே நிலை தொடரும் என்று தெரிகிறது.
எனவே மத்திய அரசு, பிரின்ஜ் பெனிபிட் வரி, சேவை வரி போன்ற வரிகளை நீக்க வேண்டும். ஏற்றுமதியாளர்கள் கட்டிய வரியை திருப்பி கொடுக்கம் விகிதாச்சாரத்தை அதிகரிக்க வேண்டும். கைத்தறி ஏற்றுமதியாளர்களுக்கு வங்கிகள் விதிக்கும் கட்டணத்தை நீக்க வேண்டும். ஏற்றுமதி மதிப்பில் குறைந்தபட்சம் ஐந்து விழுக்காடு சலுகை வழங்க வேண்டும்.
இதே போல் கடனுக்கான வட்டியை 8 விழுக்காடாக குறைக்க வேண்டும். 24 மாதங்களுக்கு கடன் திருப்பி செலுத்துவதில் இருந்து சலுகை வழங்க வேண்டும். கழிவு பருத்தி மீது விதிக்கும் 1 விழுக்காடு வரியை நீக்க வேண்டும். மாநில அரசுடன், மத்திய அரசு இணைந்து ஆலோசித்து தடை இல்லை மின்சாரம் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளது.