சென்னை: தனியார் நிறுவனங்கள் சாலை மேம்பாட்டு பணிகளில் பங்கேற்கும் வகையில், மத்திய அரசு கூடுதல் சலுகைகள் வழங்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை சுமார் 19 கி.மீட்டர் நீளத்திற்கு மேல்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் மதுரவாயல் சந்திப்பில் அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் மன்மோகன் சிங் பேசும் போது, தனியார் நிறுவனங்கள் சாலை மேம்பாடு, மற்ற உள்கட்டுமான பணிகளை மேற்கொள்வதால், அரசின் நிதி மற்ற தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்திய நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையத்தால் அமைக்கப்படும், இந்த நான்கு வழி மேல்மட்ட சாலை கட்டி முடித்து, குறிப்பிட்ட காலம் பயன்படுத்தி, அதன் பிறகு அரசிடம் ஒப்படைக்கும் திட்டத்தின் கீழ் போடப்படுகிறது. [Build Operate and Transfer (BOT)] இனி எதிர்காலத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் சாலை வசதிகளை விரிவுபடுத்தும் பணிகள், இதே போல் அரசு-தனியார் பங்கேற்கும் திட்டத்தின் படி மேற்கொள்ளப்படும்.
தனியார் நிறுவனங்கள் சாலை மேம்பாட்டு பணிகளில் ஈடுபடும் வகையில் கூடுதல் சலுகைகளும், மற்ற உதவிகளும் செய்யப்படும். இதனால் சாலைகளை போடுவதற்கும், பராமரிக்கவும் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படும்.
அரசின் சாலை மேம்பாட்டு திட்டங்களில், மேல்மட்ட சாலைகள் அமைப்பது முக்கியமான அம்சமாகும். இதனால் போக்குவரத்து வசதிகள் அதிகரிப்பதால் தொழில் துறை, பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.
இந்தியாவிற்கு உலக தரமான சாலை உள்கட்டமைப்பு, போக்குவரத்து, துறைமுகம், ரயில் போக்குவரத்து வசதிகள் தேவை.
இந்த வசதிகளை உலக தரத்துடன் குறிப்பிட்ட காலத்திற்குள் ஏற்படுத்த அரசு முனைப்புடன் செயலாற்றுகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
இந்த விழாவிற்கு மத்திய கப்பல், சாலை போக்குவரத்து - நெடுஞ்சாலை துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.