சிறு, குறு, நடுத்தர தொழில் பிரிவுகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வழங்கும் கடனுக்கு வட்டியை குறைத்துள்ளதாக ஐ.டி.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி மைக்ரோ இன்டஸ்டிரிஸ் எனப்படும் குறுந்தொழில்களுக்கு 1 விழுக்காடு வட்டி குறைக்கப்படும். இந்த புதிய வட்டி ஏற்கனவே வாங்கிய கடனுக்கும், புதிதாக வாங்க உள்ள கடனுக்கும் பொருந்தும்.
நடுத்தர தொழில் பிரிவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கொடுக்கப்படும் கடனுக்கான வட்டி அரை விழுக்காடு குறைக்கப்படும். இது அதிகபட்ச கடன் ரூ.10 கோடி வரை பொருந்தும். இது சென்ற வருடம் நவம்பர் மாதம் உள்ள வட்டி விகிதத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும்.
தொழிற்சாலைகள் ஒரு வருடத்திற்குள் திருப்பு செலுத்தும் வகையில், நடப்பு மூலதன தேவைக்காக, அவற்றின் தேவையின் அடிப்படையில் கடன் வழங்கப்படும். இது ஏற்கனவே உள்ள கடன் வரம்பில் 20% வரை வழங்கப்படும்.
இது குறித்து ஐ.டி.பி.ஐ வங்கியின் செயல் இயக்குநரும், சிறு தொழில் கடன் பிரிவு தலைமை அதிகாரியுமான டி.ஆர்.பாலாஜி கூறுகையில், வளரும் பொருளாதாரத்திற்கு சிறு, குறு, நடுத்தர தொழில்களின் வளர்ச்சி இன்றியமையாதது என்று நினைக்கின்றோம். தொழில் வர்த்தக சமுதாயத்திற்கு எங்களது கடமைகளை நிறைவேற்றும் பணியில், முக்கியமான நடவடிக்கையாக வட்டி குறைக்கப்பட்டுள்ளது என்றார்.